“ஹாய் & ஹலோ. வெல்கம் டு வாழ்த்தலாம் வாங்க. நம்ம கூட பேச போற அடுத்த Caller” இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க தொ(ல்)லைபேசில பேசி பேசி பாட்டு போடுவாங்களே, அதைப் பத்தின பதிவுதான் இது.
முன்னாடி ஒரு காலத்துல தூர்தர்ஷன்னு ஒரே சேனல்தான் இருக்கும். ரிமோட்களெல்லாம் நிம்மதியா இருந்த காலம் அது. அப்போலாம் எங்க ஊர்லயே மொத்தம் 2 வீட்டுலதான் டிவி இருக்கும். Sutter வெச்ச Solidair டிவி நியாபகம் இருக்கா அதுதான். அப்புறம் ஊருக்கே பொதுவா பஞ்சாயத்து டிவி இருக்கும். ஊர்லயே 2 வீட்லனு சொன்னேன்ல, அதுல ஒண்ணு எங்க அத்தையாங்க வீடு. எல்லாரும் உக்காந்து பார்க்குற மாதிரி ஒரு இடத்துல டிவி இருக்கும். நிறைய பேர் பார்ப்பாங்க. எங்க அத்தை வீடுங்கிறதால நான் chairல உக்காரலாம், Volume குறைக்கலாம் கூட்டலாம். என்னோட மத்த நண்பர்களெல்லாம் பொறாமையா பார்ப்பாங்க. அந்த வயசுல அதுல ஒரு தனி பந்தா.
நானும் எங்க அக்காவும் ஸ்கூல் ஹோம்வொர்க்லாம் 7.30P.M மணிக்குள்ள எழுதிட்டு, 8.00P.M க்குள்ள சாப்பிட்டுட்டு அத்தை வீட்டுக்கு ஓடிருவோம். ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன், எங்க அத்தைக்கு 4 பொண்ணுங்க . ரொம்ப பொறாமைப்படாதீங்க எல்லாரும் என்னை விட பெரியவங்க
. 7.55 க்கெல்லாம் அத்தை வீட்ல ஆஜர். அய்யாதான் டிவிய ஆன் பண்ணுவேன். 7.59க்கு செய்திகளுக்கு Count down ஸ்டார்ட் ஆனதுமே நானும் எங்க அக்காவும் ஒரு பந்தயம் கட்டுவோம் ‘இன்னைக்கு செய்தி வாசிக்கப்போற ரெண்டு பேருமே லேடீஸ்-னு நானும், இல்ல ரெண்டுமே Gentsனு எங்க அக்காவும். அப்படி ஒரு ஆண், ஒரு பெண்-னு பந்தயம் வெச்சா யார் மொதல்ல வணக்கம் சொல்வாங்கன்னும் சேர்த்து சொல்லணும்.
பந்தயத்துல யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு இன்னொருத்தர் அடுத்த நாள் ஸ்கூல் போகும்போது ஜவ்வு மிட்டாய் வாங்கித்தரணும். அதுக்குதான் பந்தயமே. நிறைய தடவ நான்தான் ஜவ்வுமிட்டாய் வாங்குவேன். அக்கா வாங்குனாலும் பாதி தந்திருவா. (தரலைணா நானே புடுங்கிருவேன்னு தெரியும் அக்காவுக்கு). இது அத்தை வீட்ல.
வெள்ளிக்கிழமை ஆச்சுன்னா பஞ்சாயத்து டிவி பார்க்க போயிடுவேன். ஏன்னா 7.30க்கு ஒளியும் ஒலியும் போடுவாங்க. அதுல இன்னைக்கு ரஜினி பாட்டு போடுவாங்க, எம்.ஜி.ஆர் பாட்டு போடுவாங்கன்னு நண்பர்கள் கூட பந்தயம். இந்த பந்தயத்துல ஜெயிச்சா ஜவ்வு மிட்டாயில்ல, அடுத்த சனி ஞாயிறுல வாடகை சைக்கிள் எடுத்தா அதுல 2 ரவுண்டு ஓட்டத் தரணும். அதெல்லாம் ஒரு காலம். ப்ப்ச்ச்…
இப்போ எதுக்கு இந்த மொக்கைய போட்டேன்னா அப்போவெல்லாம் ஒளியும் ஒலியும்தான் பாட்டு போடுற ஒரே நிகழ்ச்சி. பழைய பாடல்களைக்கூட ஆட்டம் போட்டு ரசிச்சு பார்ப்போம். அப்புறம்தான் டிஷ் ஏண்டனா, கேபிள் டிவினு ஆக்கிரமிப்புகள் அதிகமாச்சு. கேபிள் டிவியெலாம் வந்த அப்புறம் எங்க வீட்லயே டிவி வாங்கிட்டாங்க. அப்போ எனக்கு பிடிச்ச நிகழ்ச்சி ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்’. போன் பண்ணி உமா ஆண்ட்டிகிட்ட நமக்கு பிடிச்ச பாட்டு கேட்டா அவங்க அந்த பாட்டு போடுவாங்க.
அந்த நிகழ்ச்சி எங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும். எல்லா பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா பெப்ஸி உமா வித விதமா அழகழகா புடவை கட்டிகிட்டு வருவாங்க. ஆனா அது எப்பவோ எடுத்துட்டு கொஞ்ச நாள் கழிச்சுதான் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க.
அப்புறம்தான் லைவ் டெலிகாஸ்ட் கான்செப்ட் வந்திச்சு. அவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு கால் பண்ணிட்டு நாம பேசுறத நாமளே கேக்க முடியாது. அதுவாவது பரவாயில்ல நாம கேக்குற பாட்டாவது போடுறாங்களானா அதுவும் கிடையாது.
நான் காலேஜ் ஹாஸ்டல்ல படிக்கும் போது, (நம்ம எப்போ படிச்சோம்) இருக்கும் போது lunch முடிச்சிட்டு மறுபடி க்ளாஸ் போறதுக்கு 10- 15 நிமிசம் டைம் இருக்கும். அந்த கேப்ல 2 பாட்டு கேக்கலாம்னு எஃப்.எம் போடுவோம். ‘கோடைப்பண்பலையில் இது கொடைக்கானல்’. 3 நிமிசம் விளம்பரம் ஓடும், அப்புறம் இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர்கள்னு 5 நிமிசத்துக்கு ஒரு பெரிய லிஸ்ட் படிப்பாங்க. அப்புறம் பாட்டு போடும்போது கிளம்பி க்ளாஸ் போயிடுவோம்.
லைவ் டெலிகாஸ்ட் வந்தாலும் வந்துச்சு, கூடவே ஸ்பான்சர்ஸ் - விளம்பரங்களும் வந்திருச்சு. முன்னாடியெல்லாம் நிகழ்ச்சிக்கு நடுவுலதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ விளம்பரங்களுக்கு நடுவுலதான் நிகழ்ச்சியே. அதுவும் கால் பண்ணினா எவ்ளோ நேரம் வெயிட்டிங்க்ல இருக்கணும் தெரியுமா. ஆனா பேசுறது என்னமோ 2 நிமிசம்தான். அதுவும் நாம கேக்குற பாட்டு கூட போட மாட்டாங்க . இப்போ இருக்கிற நிகழ்ச்சியெல்லாம் பெண்களுக்கு பிடிக்கிறதில்ல. ஏன் தெரியுமா? பெப்ஸி உமா அழகழகா புடவை கட்டிட்டு வருவாங்க பிடிச்சது, ஆனா இப்போ வர்றவங்கதான் டிரஸ்ஸே போடுறதில்லயே? அட ஒழுங்காவே டிரஸ் போடறதில்லைனு சொல்ல வந்தேம்ப்பா. எப்பவும் தப்பு தப்பாவே நினைக்கிறது.
அதுவும் காலையில 8 -10 வாழ்த்துக்கள் சொல்ற நிகழ்ச்சியிருக்கே. ரொம்ப மோசம், ‘அடுத்த காலர் பார்க்கலாம்னு’ சொல்வாங்க, பெயர் கேட்டுட்டு யாருக்கு வாழ்த்துக்கள்னு கேப்பாங்க. அவங்க சொல்லிகிட்டு இருக்கும் போதே கால் கட் பண்ணிட்டு, ‘கட் ஆய்டுச்சுனு; ஈஈனு பல்ல காட்டிட்டு பாட்டு போட்ருவாங்க. பாட்டும் முழுசா போட மாட்டாங்க, 2 லைன் போட்டுட்டு விளம்பரம் போட்ருவாங்க. நாஞ்சென்ஸ்…
இப்படியே போச்சுன்னா கால் பண்றவங்க பெயர் மட்டும் கேட்டுகிட்டு ‘அவர் வாழ்த்தணும்னு நினைச்சவங்களுக்காக இந்த பாட்டு, இந்த பாட்டு போடணும்னு நினைச்சதுக்காக விளம்பர இடைவேளைனு’ கிளம்பிடுவாங்க. அதுவும் இல்லைனா Loud speaker போன்ல ரிங் அடிக்கிற சத்தம் மட்டும் கேட்க வெச்சிட்டு, ‘இதோ நமக்கு யாரோ ஒருத்தர் கால் பண்ண டிரை பண்றாரு, அவர் கால் பண்ணனும்னு நினைச்சதுக்காக பாடல் பார்ப்போம், பாடலுக்காக விளம்பரம் பார்ப்போம் கிளம்பினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல
இப்போவும் பந்தயம் கட்டுவோம் ரூம்ல. ‘இன்னைக்கு VJ நல்ல ஃபிகர் வந்திருக்கும்னு. எங்க நடக்குது . தினமும் பந்தயத்துல தோல்விதான். மகாலக்ஷ்மி செல்லம் போனதுக்கப்புறம், திவ்யா அப்புறம் இப்போ நிஷா. ஏதோ இவங்களை நினைச்சு மனச தேத்திகிட்டு இருக்கேன். வேற என்ன பண்றது?
No comments:
Post a Comment