Friday 8 November, 2013

வெங்காயக் கதை

இக்ரான் தற்பொழுது அவனுக்கு நன்றாகவே பழகியிருந்தது. பறக்க எத்தனிக்கையில் உள்ளூரக் கிளம்பும் பயமோ, அதன் அதிர்வினால் இக்ரானின் கொம்புகளை இறுகப் பற்றும் பதட்டமோ இல்லை. பண்டோராவின் மேகங்களில் விளையாடிக் கொண்டிருந்தான். தனது மூளையின் சிந்தனையே, இக்ரானையும் இயக்குவதால் அவனது ஆனந்தமும், தைரியமும் இக்ரானின் பறக்கும் வேகத்திலும், வான் சாகசங்களிலும் தெளிவாய்த் தெரிந்தது. ஒரு மேகக் கூட்டம் நுழைந்த போது ஒரு நுண்ணதிர்வுடன் இக்ரான் பதற, மின்னலென குறுக்கே நுழைந்த டோரக் அவர்களை இடித்துத் தள்ளியது. இக்ரானும், அவனும் தனித்தனியே சுழன்றபடி வீழ்ந்து கொண்டிருந்தபோது, திரை முழுக்க இருள் பரவியிருந்தது. மடிக்கணினியில், ப்ளேயரின் சீக் பாரினை அடுத்த 2-3 நிமிடங்களுக்கு கடத்தியபடி

"இந்த மாதிரி கீழ விழுந்தா நமக்கு முழிப்பு வந்திரும்லடா, அதான் கட் ஆகிடுச்சு" எனக் கூறி முடித்தான் சிஜூ.

அவர்களது கல்லூரி காபிடீரியா- அவனுடன் அமர்ந்திருப்பது அவனது உறவினர்கள். சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள், அடுத்த காட்சி அவனது சொந்த ஊரில் அவன் வீட்டின் அருகிலுள்ள ஒரு மைதானத்தில் நிகழ்கிறது-ஆனால் அங்கு விளையாடிக் கொண்டிருப்பது அவனது விடுதித் தோழர்கள். அவனுக்குத் தெரிந்த மனிதர்களே, சம்மந்தமில்லாத சூழ்நிலைகளில் பயணப்படுவதான காட்சிகள் - பின் மீண்டும் திரையில் இருள்.

"இந்த ரெண்டாவது கனவு அவ்ளோ தெளிவா இல்லடா. எங்கெங்கயோ போச்சு, அப்புறம் முழிச்சிட்டேன், 3 மணிக்கே. அதுக்கு அப்புறம் தூக்கமே வரல" - சிஜூ.

"நேத்து லேப்ல ரொம்ப வேலையா? நைட் வீட்டுக்கு போன் பேசிட்டு தூங்குறதுக்கு முன்ன அவதார் படம் பார்த்தியா? உன்னோட கனவுகள் அததான் சொல்லுதுடா. கனவுகள பதிவு பண்ற கருவி பத்தின உன்னோட ஆராய்ச்சி எனக்கு பிரமிப்பா இருக்கு. ஆனா போன தடவ உன்னோட தியரி பிரசண்டேசன்க்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் நியாபகம் இருக்கில்ல? இந்த புராஜெக்ட்தான் உன்னோட லைப். மத்தவங்க இந்த வீடியோவெல்லாம் பார்த்து சிரிச்சா கூட பரவாயில்ல, உன்னோட எதிர்காலமே சிரிச்சிடாம பார்த்துக்கோ. இந்த கார்ட்டூன் அவுட்புட் பதிலா, ரியல் டைம் அனிமேசன் மாதிரியாவது டிரை பண்ணிப் பாரு. உனக்கு முழு நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் இன்னொருத்தர் யாரையாவது வெச்சு, அவங்களோட கனவுகள படம் பிடிச்சு காட்டு. கண்டிப்பா என்னோடத முதல்ல. ஆனா மூணாவது மனுஷன் ஒருத்தன் பரிபூரணமா இத ஒத்துக்கணும். அவனோட கனவுதான் திரையில வந்திச்சுன்னு 100% ஒத்துக்கணும். அங்கதான் இருக்கு உன்னோட வெற்றியே. இன்னும் உனக்கு நிறைய டைம் இருக்குதானே?"

தனது முயற்சிகளின் முதல் கட்ட முடிவுகள் குறித்த ஆரோக்கியாவின் கருத்துகளை கேட்டுக் கொண்டிருந்தான் சிஜூ.

அடுத்... என எழுதிக் கொண்டிருக்கும் போதே, பூபதியின் எழுதுகோல் முள் உடைந்து போனது. எப்பொழுதும் தனது கதைகளை கரி எழுதுகோலில் எழுதுவதே அவனுக்கு வழக்கம். மையினால் எழுதினால் ஆங்காங்கே பிழைத் திருத்தங்கள், தெள்ளத் தெளிவாய்த் தெரிந்து விடும். அழிப்பான் இருக்க பயமேன்? வார நாவல் ஒன்றில் எழுத்தாளராகப் பணியாற்றும் இவனுக்கு அறிவியல் புதினங்கள் கை வந்த கலை. தற்போது பிரசுரமாகிக் கொண்டிருக்கும் தொடர்கதை ஒன்று, இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவாகிவிடும் என்பதால் அடுத்த படைப்புக்கான கதைக்களத்தில் இறங்கியிருக்கிறான். எழுதுகோலினை மீண்டும் கூர் செய்து முடித்த போது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வாசல் அணுகினான்.

கதவு திறந்ததும், சைலன்சர் பொருத்தப்பட்ட பிஸ்டல் காரி உமிழ்ந்த தோட்டா ஒன்று அவனது சட்டைப் பைக்கு அருகாமையில் உள் நுழைந்து இதயம் தொட்டதின் அடையாளமாக, குருதி வழிய பூபா தரையில் சாய்கிறான்.

அச்சு அசலாக தன்னைப் போலவே ஒருவன், குளிர் கண்ணாடியினைக் கழற்றியபடி, பிஸ்டலை பின் இடுப்பில் செருகிக் கொண்டு, உள்ளே நுழைவதை வெறித்தபடியிருக்க, வழிந்த குருதி தரையில் 'இடைவேளை' என வரைவது திரையில் மிளிர்கிறது. திரையரங்கினுள் வெளிச்சமும் சலசலப்பும் பரவ, குமார் - உமாவிடம் "பாப்கார்ன் வாங்கிட்டு வர்றேன்மு" எனக் கூறிவிட்டு இருக்கைகள் கடந்து வெளியேறுகிறான்.

Tuesday 16 April, 2013

[சிறுகதை] ஐஸ் வண்டி…


“நாலு தடவ சொல்லியும் போகாத கழுத இருபது பைசா தாரேன், முட்டாயி வாங்கிக்கோனு சொல்லி முடிக்கங் காட்டியும் ஓடுது பாரு” 
பாபுவின் சாமர்த்தியத்தினை அவனது அம்மா விமர்சித்துக் கொண்டிருந்தாள். கடையிலிருந்து திரும்பியவன் கையில் அம்மா சொல்லி அனுப்பிய கோதுமை ரவை பாக்கெட் மட்டும்தான் இருந்தது, 
“முட்டாயி எங்கீடா? வாங்குனதுமே தின்னுபோட்டியா?” 
அம்மாவின் கேள்விக்கு “இல்லிங்க்மா, ஜோப்பில இருக்குதுங். நாளைக்கு ஸ்கோலுக்கு போறப்ப எதுனா வாங்கிக்றேனுங்” பாபு பதில். 
‘எதுனா’ என்பது என்னவென பாபு அந்த இருபது பைசா வாங்கும் முன்னரே முடிவெடுத்து விட்டான். இதுவரை இப்படி சேர்த்த பைசா இதனோடு சேர்த்து ஒரு முழு ரூபாய். நாளை ஐஸ் மாமாவிடம் சேமியா ஐஸ் வாங்குவதுதான் திட்டம். அம்மாவிடம் ரவை பாக்கெட் கொடுத்துவிட்டு, பைசாவினை பென்சில் பெட்டியின் அடியில் உள்ள மயிலிறகுக்கு அருகில் சேர்த்தான்.
 “ம்மா விளையாடப் போயிட்டு வரேனுங்” 
அனுமதி எனும் பெயரில் தகவலைச் சொல்லிவிட்டு
 “சக்கிலி வளவு பக்கமா உன்னைய பார்த்தேன்னா, உங்கப்பாருகிட்ட  சொல்லி டின்னு கட்டிபோடுவேன்” 
அம்மாவின் உத்திரவு/எச்சரிக்கை காற்றில் கரைவதற்குள் பாபு தெருவிலிருந்து மறைந்திருந்தான். விளையாடி வீடு திரும்பியதும் ஒருமுறை, இரவு உணவுக்குப் பின் ஒருமுறை, உறங்கும் முன் ஒருமுறை என மூன்று ரூபாய் அளவிற்கு எண்ணி முடித்தான். கனவினில் நாளைய சேமியா ஐஸ் வந்திருக்குமா தெரியாது, ஆனாலும் நன்றாகவே உறங்கிப் போனான்.

காலையில் பள்ளியில் எல்லோரும் நீராருங்  கடலுடத்த வென தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடிக் கொண்டிருக்க, பாபு மட்டும் மதிய உணவு இடைவேளை எப்பொழுது வருமென சுவர்க் கடிகாரத்தினை விரட்டியபடி அவன் வயதுக்குரிய தேசத் துரோகமொன்று செய்து கொண்டிருந்தான். 12 .30 மதிய உணவு இடைவேளை – பத்து நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் காலி செய்து விட்டு, ஐஸ் மாமா வரும் வழி நோக்கி விரைகிறான். மாமா வரும் வரை அவனுக்கு விளையாட்டில் கவனமே இல்லை, ‘பாம் பாம்’ என எங்கோ ஹாரன் பிளாடர் அழுத்தும் சத்தம் பாபுவிற்கு நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஆதாரமாய்க் கிடைத்த கயிறென ஒலிக்கிறது. ‘ஏனுங் மாமா இன்னைக்கு  இவ்ளோ லேட்டு?’ 
என தேனடையைச் சுற்றிய தேனீக்களாய் ஐஸ் வண்டியைச் சுற்றியது கூட்டம்.
 “நானு என்னுமோ எங்க்கூட்லேர்ந்து ஐஸ் பண்ணி விக்கிரவனாட்ட கேக்குதுங்க பாரு. ஐஸ் கம்பேனிக்கு போயி பாக்ஸ் பேக் பண்ணி கொண்டார வேணாமாடா கண்ணுகளா? எப்பியும் சீக்கிரமா போற 12 மணி ரெயிலு இன்னைக்கு லேட்டு ஆயிப்போச்சாட்ட இருக்குது. நா வர்றப்பதேன் ரயிலு கேட் போட்ருந்தான். நானு என்ன புட்டுர் பைக்கா  வெச்சிருக்கேன்? 2 மைலு போயி சுத்திட்டு வர்றதுக்கு? அதாண்டா லேட்டு. மாமாக்கு ஆராய்ச்சு தண்ணி தாங்கடா, வெயில்ல பெடலு முதிச்சு தொண்ட தண்ணி வத்தீருச்சு” 
ஐஸ் மாமாவின் தாகம் தீர்க்க வாட்டர் பாட்டிலுடன் தண்ணீர் டாங்க் நோக்கி  ஓடிய நான்கு வாண்டுகளில் முதல் வாண்டு யாராக இருக்குமென உங்களுக்கு சொல்லித்தான் தெரியுமா? “அடிச்சுக்கிடாம ஒவ்வொருத்தரா கேளுங்க கண்ணுகளா. எல்லாருக்கும் மாமா, ஐஸ் வெச்சிருக்கேன்டா. பாலைஸ், கப்பைஸ், கோனைஸ்” –
 -ப்ப்பாம், ப்ப்பாம்-
 – “மாமா ஒரு சேமியா ஐசுங்” 
பாபு குரலுக்கு தலை நிமிர்ந்த ஐஸ் வண்டி “என்னடா கண்ணு நல்லாருக்கியா? இன்னைக்கு காசு சாஸ்தி சேத்துப் போட்டியாட்ட இருக்குது. அம்பது பைசா மேங்கோ ஐஸ் வாங்காம, ஒர்ரூபா சேமியா ஐஸ் கேக்குற?” –
 ஐஸ் வண்டிக்கு பாபு மேல் மட்டும் தனிப் பிரியம். சேமியா ஐசினை காதலிக்கும் வயது பாபுவுக்கு. மழை நாளொன்றில் தலை நனைவதைக் காக்க பாலித்தீன் பையினை தலையில் சுற்றி இறுக்கம் தளர்த்த முடியாமல் போட்டோவாகிப் போன ஐஸ் வண்டி மாமாவின் மகனின் பெயர் பாபுவாக இருந்திருக்கலாம் என்பதான சென்டிமென்ட் புரிய வாய்ப்பில்லை..

இன்று பாபுவின் நண்பர்களுக்கு வழக்கமாய்க் கிடைக்கும் அந்த காக்கா கடி ஐஸ் துண்டு கிடைக்காது எனத் தெரியும். இது அவன் எப்பொழுதும் வாங்கும் மேங்கோ ஐஸ் இல்லையே, அவனுக்கு மிகப் பிடித்த சேமியா ஐஸ் ஆயிற்றே. காதலர்களை தொந்திரவு செய்வதில் நண்பர்களுக்கு என்றுமே விருப்பம் இருந்ததில்லை. பாபுவும் அவனது ‘ஐஸ்’-ம் தனிமையின் சுகத்தில் உருகிக் கொண்டிருந்தனர். ஐஸ் வண்டி – இப்படித்தான் அந்த ஊரில் அவரை எல்லோருக்கும் தெரியும்.
 ‘இந்தாப்பா ஐஸ்’ ‘ஏய் ஐஸ்’ ‘ஐஸ் வண்டிக்காரரே’ ‘ஐஸ் ஐஸ்’ என்றுதான் அவர் கேட்டு பழக்கப் பட்டிருக்கிறார். சென்ற வருட மாரியம்மன் கோவில் திருவிழா நன்கொடை வரவு நோட்டில் ‘ஐஸ் வண்டிக்காரர்  - ரூ 5 .25 ‘ என்ற பத்திரப் பதியமும் இவரை விட்டு வைக்கவில்லை. கோடை விடுமுறை நாளொன்றில் வீட்டருகே ஐஸ்  மாமாவிடம் மேங்கோ ஐஸ் வாங்கிய போது அம்மா வந்து கேட்டது 
“அடதேனப்பா ஐஸ் வண்டி, நீங்க என்ன சனம்?”
 சட்டென மாமாவின் முகம் மாறியதின் காரணம் பாபுவுக்கு விளங்கவேயில்லை. இதே போலத்தான் பல சமயங்களில் மாகாளி புறக்கடை பக்கமாக மட்டுமே வருவதும், அவருக்கென புறக்கடை கூரையில் சொருகியிருக்கும் ஈயத் தட்டு, குவளை பற்றியும், அவர் தன்னை தேவுரே(கடவுளே) என அழைப்பதற்கும் பாபுவிற்கு என்றுமே விளங்கியதேயில்லை சில பருவம் கடக்கும் வரையில்.

மொத்தப் பள்ளிக்கே அரை சதத்திற்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணாக்கர்களுக்கு துவக்கப் பள்ளி வரை மட்டுமே வாய்க்கப்படிருந்தது அந்த அழகிய கிராமத்திற்கு. அதிகம் படிக்க வைப்பதற்கோ, சத்துணவு இல்லா விட்டால், வீட்டினில் உணவு அளிக்கும் அளவிற்கோ வசதி வாய்ப்பில்லாத ஏனைய குடியானவர்களுக்கு தங்களது பிள்ளைகளை கட்டிட வேலைக்கோ, தறிப் பட்டறைக்கோ, பனியன் கம்பெனிக்கோ அனுப்புவது மட்டுமே விதிக்கப் பட்டிருந்தது. மச்சு வீட்டுப் பிள்ளைகளுக்கு அது திருத்தி எழுதப் பட்ட விதி. பாபுவைப் போல, சீரான சட்டங்களின் மேல் அடுக்கிய ஓடுகள்/சிமெண்ட் கூரைகளில் தினமும் கண் விழிக்கும் தவப் புதல்வர்கள் மட்டும் துவக்கப் பள்ளி கடந்து கல்வி தொடரலாம். இப்பொழுது பாபுவின் பள்ளிக்கு எதிரேதான் ஐஸ் கம்பெனி என்பதால், அவ்வப்போது மட்டும் பாபு ஐஸ் மாமாவினை சந்திக்க முடிந்தது. அதுவும் அந்த இடத்தில் பேக்கரி வரும் வரையில் தான். அதன் பிறகு ஐஸ் மாமாவினை பாபு சந்திக்கவேயில்லை.

அரைக்கால் சட்டையிலிருந்து – முழுக்கால் சட்டை, பிளாஸ்டிக் பாக்சிலிருந்து – நடராஜ் ஜியாமட்ரி பாக்ஸ், வால் சொடுக்கினால் தலையை நீட்டும் பால் பாய்ன்ட் பேனாவிலிருந்து – ஹீரோ பேனா என பாபுவின் மாற்றங்களுக்கான பட்டியல் நீண்டது. பள்ளிச் சீருடையிலிருந்து சாதாரண உடை, வியாழக் கிழமை சந்தையில் வாங்கிய செருப்பிலிருந்து பெல்ட் செப்பல், ஒட்ட வெட்டிய கேசத்திலிருந்து ஹீட்டர் வைத்து படிய வாரிய தலை, ஜீன்ஸ், ஒன்-சைடு காலேஜ் பேக், கையில் காப்பு என பாபு வளர்ந்து மாற்றம் பெற்றதுடன், அவன் பார்த்து வளர்ந்த கிராமமும் – வாழைத் தோப்புகளில் வரிசையாக கல் முளைத்து அவென்யூக்களும், மிதிவண்டி/மாட்டு வண்டித் தடங்களில் டி.வி.எஸ் மொபட்டுகளும், பரம்பரைத் தொழில் கொண்டே பெயர் சூட்டப் படும் பலரும் இன்று சாரை சாரையாய் பனியன் மில் ஊழியர்களாயும் மாற்றங் கண்டு விட்டனர்.

கல்லூரி விழா சம்மந்தமாக ஒரு நாள் பாபு டவுன் வந்த போது, எதேச்சையாக ஐஸ் மாமாவினைச் சந்தித்தான்.
 “மாமா எப்படி இருக்கீங்? அடையாளம் தெரியுதுங்களா? நாந்தானுங் மாமா பாபு” 
குரலோ, உருவமோ அவருக்கு பிடிபடாவிடினும், பெயர் மட்டும் அவனை நன்றாக நிலைக்காட்டியது.
 “நல்லா இருக்கியா கண்ணு? எத்தசோடு வளந்துட்டடா? அடையாளமே தெரீலப்பா. நீயாவது அடையாளங்கண்டியே ”
 மாமாவின் நரையினையும், தடித்த மூக்குக் கண்ணாடியும் ஆச்சரியமாய்ப் பார்த்த படி “இப்போ என்ன பண்றீங் மாமா. ஐஸ் இன்னும் இருக்குதுங்களா?”
 வெறுமையான சிரிப்பொன்றினை உதிர்த்து விட்டு
 “இல்லீடா கண்ணு. சைக்கிள் முதிக்க முடியலன்னு மொபட்டு வாங்கி, அதுக்கு எண்ணெய் ஊத்த முடியாம, கம்பெனி ஓனரும் நட்டத்துல எத்தன நாள் நடத்துறதுன்னு கடைய வித்துப் போட்டாரு. நானும் அங்க இங்க சுத்திப்போட்டு  கடைசியா பனியன் மில்லே கதின்னு வந்திட்டேன்” 
அதன் பிறகு இருவருமே என்ன பேசலாமென மௌனமாய் விவாதித்துக் கொண்டிருந்தனர். தன் நிறுத்தத்திற்கு முன்னதாக இருக்கையிலிருந்து எழுந்த மாமாவிடம் பாபு 
“மாமா உங்க பேரு என்னங் மாமா?”
 பாபுவின் தோளில் கை பதித்து சொன்னார் 

“முருகேசன்-டா கண்ணு, ஐஸ் வண்டி முருகேசன்”

Wednesday 14 November, 2012

துப்பாக்கி...



போன தீபாவளியில் முதல் நாள் மாலையே வேலாயுதம் எனும் வெற்றிக் காவியம் கண்ட நமது குமார், இந்த முறையும் சற்றும் மனம் தளராமல் இந்த தீபாவளிக்கும் முதல் நாள் இரண்டாம் காட்சிக்கே துப்பாக்கியினை எதிர் கொள்ளத் துணிந்து விட்டார். வர மாட்டேன்னு அடம் புடிச்ச 10 பேருக்கும் சேர்த்து டிக்கெட் புக் பண்ணி மொத்தமா கிளம்பிட்டோம். 'ஒவ்வொரு தமிழனும் பெருமைப் படணும், கர்வப் படணும்' எங்கேயோ இருந்து ஒரு எச்சரிக்கை, கூடவே 'சும்மாவே காட்டு காட்டுன்னு காட்டுவான், நீ வேற காட்டு காட்டுன்னு சொல்ற. இனி அவ்ளோதான்' சேர்ந்து ஒலிக்குது. சீட் பெல்ட்லாம் போட்டுக்கிட்டு ரெடியாகியாச்சு, படமும் போட்டாச்சு. அண்ணன் வர்ற ட்ரெயினுக்காக காத்திருக்கிற தங்கைகள், அப்பா அம்மாவோட முகமே இவங்கதான் ஹீரோ பேமிலினு காட்டிட்டுது. எங்கேயோ நடுக்காட்டுல ட்ரெயின் ரிப்பேர்னு நிக்குது. தியேட்டருக்கே தெரியும் இப்போ ஹீரோ இன்ட்ரோ. எஞ்சினே ஸ்டார்ட் ஆகல ஆனா ட்ரெயின் மூவ் ஆகுது, எல்லாரும் ஆச்சரியமா பாக்கும் போது ஹெலிகாப்டர்ல கேமராவ கடைசி போட்டிலேர்ந்து எஞ்சின்  வரைக்கும் போகஸ் பண்ணி எடுத்திட்டு போறோம். ட்ரெயின் முன்னாடி யாரோ ஒருத்தன் சட்டை போடாம பனியனோட, ஆர்ம்ஸ்லாம் தெரியுற மாதிரி ஓடுறான். கயிரோட ஒரு முனைய ட்ரெயின்ல கட்டிட்டு, இன்னொரு முனைய தன்னோட இடுப்புல கட்டி இழுக்கிறாரு தளபதி. இப்டிலாம் இமேஜின் பண்ணிதான் படம் பார்த்தேன், ஆனா இது எஸ்.ஏ.எஸ் படம் இல்லையே ஏ.ஆர்.எம்  படமாச்சே!!!! ஆர்ப்பாட்டமே இல்லாம தளபதிக்கு இன்ட்ரோவா? 'அட' அப்படின்னு நம்ம எப்.எம் பாலாஜி ரிவியு சொல்லும்போது ஒரு பொண்ணு சொல்லுமே அப்படி சொல்லிகிட்டு கொஞ்சம் இன்ட்ரஸ்ட் ஆகுறோம்.
*
40 நாள் வேகேசனுக்காக ராணுவத்திலிருந்து வீட்டுக்கு மும்பை வர்றாரு ஜெகதிஸ். வந்த இடத்துல ஸ்டேசன்லேர்ந்தே பொண்ணு பார்க்க கூட்டிட்டு போயிடறாங்க. வேற யாரு (காஜல்) நிஷா எண்ட்ரிதான். ஆனா கான்செப்ட்டே இல்லாம ஜெகதிஸ் வேணாம்னு சொல்ல, அப்புறமா புடிச்சிருக்குன்னு சொல்ல - அட படத்துல 5 பாட்டு வேற எப்படிதான் கொண்டு வர்றதாம்? அத விடுங்க. பாட்டுனா பாட்டேவா? பைட்டு பைட்டு, பைட்டுனா பைட்டேவா? ரொமான்ஸ் ரொமான்ஸ், பாட்டு பாட்டு, பைட்டு பைட்டுனு முதல் 40 நிமிசம் என் கூட வந்த எல்லாரும் என்னைய தூக்கி போட்டு மிதிக்கலாமா இல்ல அடுத்த ஷோவுக்கும் டிக்கெட் எடுத்து இவன மறுபடி பாக்க வேக்கலாமானு யோசிக்கும் போது ஸ்க்ரீன்ல தளபதி டயலாக் சொல்றாரு "இப்போ என் வீட்லேர்ந்து ஒருத்தன் பின்வாசல் வழியா வெளிய வருவான், அவன நாம பாலோ பண்ணனும்" என்னோட மைன்ட் வாய்ஸ் 'இப்போ குமார்னு ஒருத்தன் தியேட்டரோட பின் வாசல் வழியா எஸ்கேப் ஆக பார்ப்பான். அவன விடாம நாம புடிச்சு உள்ள உக்கார வெக்கணும்' அடுத்த காட்சில தளபதி ஒரு அசைன்மென்ட் முடிக்கிறாரு. அந்த அசைன்மென்ட் ஆரம்பிக்கும் போது  ஒரே சிப்பு சிப்பா இருந்துச்சு, முடிக்கும் போது, முன்ன சொன்ன மாதிரி இந்த இடத்துல இன்னொரு 'அட' போட வெச்சிட்டாங்க.
*
வழக்கமான பச்சை கார்கோ போட்ட பாகிஸ்தான் தீவிரவாதி இல்லாம, ஸ்லீப்பர் செல்ஸ்னு ஆரம்பிக்கும் போது, வில்லன் - ஹீரோகிட்ட போன்ல சவால் விடுறான் 'தக்காளி உன்ன கொன்னே போடுவேன்' தளபதி ரிப்ளை 'Am waiting'. இன்டர்வெல். இப்பயே ஓடிப் போயிரலாம்னா கதவ வேற மூடிட்டான். படம் நல்லா இருக்குமோனு தோணுது, ஆனா இல்லாம போச்சுனா உசுருக்கு உத்திரவாதம் இல்ல. அப்போதான் இன்னொரு விஷயம் பொறி தட்டிச்சு. தளபதி இப்போ வரைக்கும் பஞ்ச் டயலாக்கே பேசலையே? செகன்ட் ஹால்ப் நல்லாத்தான் இருக்குமோ? சரி போய்தான் பார்ப்போமேன்னு உள்ள போனேன். பரவாயில்ல மக்களே சங்கர் சார் படத்துல நடிச்சு தளபதி தெளிவாயிட்டர்னு நினைக்கிறேன். துப்பாக்கிய நல்லாவே சுட்டிருக்காரு.  ஸ்லீப்பர் செல்ஸ் கெட்டவனுங்க, ஹீரோ நல்லவன், படத்தோட முடிவு என்னனு தெரியாதா என்ன? இருந்தாலும் தளபதி+முருகதாஸ்+சந்தோஷ் சிவன் காம்பினேசன்ல துப்பாக்கி உங்கள நிச்சயம் திருப்தி படுத்தும்.
*
தளபதி - இப்போதான் ட்ராக் பிடிச்சிருக்கீங்கனு நினைக்கிறேன். இப்படியே கண்டினியூ பண்ணினா, அதாவது இதே மாதிரி படங்களா இல்லாம அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர்ந்தா நல்லா இருக்கும். சங்கர், முருகதாஸ்னு ஒழுங்கா டைரக்டர் செலக்ட் பண்ண ஆரம்பிச்சிருக்கீங்க. நடிப்பு, டான்ஸ், ஆக்சன்லாம் எப்போமே ஒழுங்காதான் பண்றீங்க. கதை, டைரக்டர்லதான் எப்பவும் சொதப்பல்ஸ் இருக்கும். இனிமே என்ன பண்றீங்கன்னு பாக்கலாம். படத்துல அங்கங்க ஒரு சில காட்சிகள் உங்க இந்த படத்து ஹேர் ஸ்டைல் மாதிரி இருந்தாலும், ஓவரால் பெர்மாபென்ஸ் - ஐ லைக். பஞ்ச் டயலாக் இல்லாம ஆக்சன் படம் ஒத்துகிட்டதுக்காகவே இன்னொரு 'அட'. தங்கச்சி, அம்மா கேரக்டர்கள் படத்துல இருந்தாலும் செண்டிமெண்டல்ஸ் இல்லாதது - குட் குட். ஆமா பர்ஸ்ட் சீன்ல சட்டை போடாம பனியனோட ஆடினீங்களே, க்ளைமாக்ஸ் பைட்டுல ஏன் சட்டை கிழியக் கூட இல்ல? அப்புறம் வில்லனுக்கும் சட்டை கிழிக்கணும், அவன் ஆர்ம்ஸ் நம்ம லேக் பீஸ் சைஸ்ல இருக்குனு பயமா? இல்ல குருவில அப்படி டிரை பண்ணது சிரிப்பொலி சானல்ல போடுறாங்களேனு தெரிஞ்சு போச்சா? நண்பனை தொடர்ந்து இன்னொரு விருந்து கொடுத்திருக்கீங்க உங்க ரசிகர்களுக்கு. என்ஜாய் பண்ணட்டும் பசங்க.
*
நிஷா @ காஜல் - "டைரக்டர் சார் படத்துல என்ன கேரக்டர்? எனக்கு எந்த அளவுக்கு வெயிட்டேஜ்?" டைரக்டர் - "நீங்க வந்தா மட்டும் போதும். உங்களுக்கு 5 பாட்டு இருக்கு" அவ்ளோதான்.
*
இ(ம்)சை - ஹாரிஸ் கிட்ட சரக்கு தீர்ந்திடுச்சுனு நினைக்கிறேன். எல்லாம் முன்னாடி கேட்ட டியூனாவே இருக்கு. 'ஏய் ஹாரிஸ்க்கு இதே கமென்ட் நீ முதல்லயே சொல்லிருக்க குமாரு' ஆமா அவரு மட்டும் போட்ட டியுனே மறுபடியும் போடுவாராம், நாங்க மட்டும் புதுசா யோசிச்சு கமென்ட் சொல்லனுமா? மொதல்ல உன்ன நாடு கடத்தணும் ஹாரிஸ். உன் ரேஞ்சுக்கு ஏ.ஆர்.ஆர், யுவன் லாம் சொல்ல முடியாது. அனிருத், ஜி.வி.பி கிட்ட டியூசன் கிளாஸ் ஜாயின் பண்ண டிரை பண்ணலாமே?
*
ஒளிப்பதிவு - தலைவாஆஆஆஆஆஆஆஆ. உங்களுக்கு ஆஸ்கார் கெடச்சதுல தப்பே இல்ல. படத்துக்கு உங்களோட காமிராதான் செகன்ட் ஹீரோ. I'm impressed. தங்கச்சிய காப்பத்துற சீன்ல புகைக்கு பின்னாடி இருந்து என்ட்ரி ஆகுற தளபதி, சாங்க்ஸ் பாக்குறதுக்கு எல்லாமே அருமை. - ‘அட’
*
பத்மஸ்ரீ ஜெயராம் கலக்கிருக்காரு. கொஞ்சம் காட்சிகளே வந்து போனாலும் அவர் வர்ற எல்லா காட்சிளையும் சிரிப்பு கியாரண்டி. சத்யன் - உங்களுக்குள்ள ஒரு நல்ல கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் ஒளிஞ்சிருக்காரு. நல்லா வருவீங்க தம்பி, ட்ரஸ்-செல்ப் ல தீவிரவாதியா பார்க்கும் போது கண்ல ரியாக்சன் காட்டுறதும், 'பெட்ரமாக்ஸ் லைட்டேதான் வேணுமா' டயலாக்குக்கு ரீ-என்ட்ரி கொடுக்கும் போதும் அசத்தல். இந்த இடத்துல கூட நாம ஒரு 'அட' சேர்த்துக்கலாம்.
*
ஏ.ஆர்.முருகதாஸ் - உங்க சரக்கு காலி ஆகிட்டே வருதுன்னு நினைக்கிறேன். வழக்கமா உங்க படங்கள் ஆரம்பத்திலேயே சூடு பிடிச்சு கடைசில ஜவ்வு போடும். இந்த படம் மெதுவா ஏறி அப்புறம் இறங்கி இருக்கு. இந்த படத்துக்கு நீங்க விஜய் டிவில கொடுத்த பெட்டியெல்லாம் நான் பாக்கல, அனேகமா போதி தர்மருக்காக வாய விட்டு வாங்கி கட்டுனதுலயே திருந்திருப்பீங்கனு நினைக்கிறேன். அடுத்த படம் என்ன பண்ண போறீங்கனு காத்திருந்து பார்ப்போம். எது எப்படியோ, துப்பாக்கிய வழக்கமான விஜய் படமா இல்லாம முருகதாஸ் ஸ்டைல்ல கொடுத்ததுக்கு தாங்க்ஸ்.
*
படத்துல ஹீரோவுக்கு மாஸ் இன்ட்ரோ இல்ல, பஞ்ச் டயலாக் இல்ல, அம்மா, தங்கச்சி சென்டிமென்ட் இல்ல, அந்த அசைன்மென்ட் பண்ற இடத்துல 12 இடங்கள்லயும் ஹீரோவே போய் எல்லாரையும் சுட்டு 12 பேரும்  ஒரே நேரத்துல விழற மாதிரி காட்டாதது இது மாதிரி பல விஷயங்கள் வழக்கமான விஜய் படங்கலேர்ந்து இத தனிமைப் படுத்தி ஜெயிக்க வெச்சிருக்கு.
*
சந்தோஸ் சிவனின் மூன்றாவது கண் வழியா காஜல் அகர்வால் படத்துக்கு ப்ளஸ்தான், ஆனா அந்த கேரக்டர் மைனஸ். காஜல் ஸ்க்ரீன்ல வந்தாலே தியேட்டரே அலறும் 'அய்யய்யோ பாட்டு போட்டிருவானே' - Haris rocks. முதல் பாதில ஸ்லீப்பர் செல்ஸ் அசைன்மென்ட்னு சீரியஸா போகுற டிராக்குக்கு பேரலல்லா காமெடி & கில்பான்ஸ் டிரை பண்ணது சரியா வரல. சின்ன சொதப்பல். க்ளைமேக்ஸ் காட்சி கில்லியோட க்ளைமேக்ஸ் ஜெராக்ஸ். நிறைய இடங்கள்ல ஹிந்தி டயலாக்குக்கு சப் டைட்டில் இல்ல. வில்லன் இங்க்லீஸ்லதான் பேசுறான், அதையே ஆடியோ போட்டு தமிழ் சப்டைட்டில் போட்டிருக்கணும். இல்லனா அவனுக்கும் தமிழ் டப்பிங் பேச வெச்சிருக்கணும். அவன் வேற லாங்க்வேஜ் பேசுறதும் கேக்குது, 2 செகன்ட் டிலேல தமிழ் டயலாக்கும் வர்றது  டாகுமென்ட்ரி  படம் எபெக்ட் கொடுக்குது. இது மாதிரி சின்ன சின்ன ஜெர்க்கு.
*
இந்த தீபாவளி விஜய் ரசிகர்களுக்கு தல தீபாவளி, சாரி சாரி தளபதி தீபாவளி
*
துப்பாக்கி - டமால் டுமீல்...

Wednesday 3 October, 2012

பிறழ்வு - ஒரு டிரை


நதியெனப் பரந்து, அருவியென வீழ்ந்து
பாறைச் சிதறல்களில் சிரம் வெடித்து வீழ்கிறேன்,
குருதிப் பள்ளங்களில்
ஆறுதல் தேடிய மடித் தூக்கங்களில்
தலை வருடும் சர்ப்பமென
விஷப் பற்களின் கீறல்கள்
ஆரத் தழுவும் நம்பிக்கைகளில்
கழுத்து நெரிக்கும் துரோகங்களென
பிணம் முளைக்கும் கரிசல் பூமி
மழலைத் தொடுதலென கூடு துளைக்கும்
தோட்டாக்களில் சிகரெட் புகையெனப் பிரியும்
உயிர் நாளங்கள்
உருக்கும் குளிர் போக்கிய போர்வைகளில்
சாம்பலாக்கும் கனலென மணக்கும்
நாளைய நினைவுகள்

Monday 1 October, 2012

திருட்டுத் தாண்டவம்...


எந்த விஷயம்னாலும் 15  நிமிசத்துல மறந்திடும் ஹீரோவுக்கு, நம்பர் 4 னு மார்க் பண்ணின வில்லனோட அடியாள் போட்டோவ வெச்சு அவனைத் தேடிப் போய் கொலை பண்றாரு சஞ்ஜய் - நம்பர் 5 எங்க இருக்கான்னு தகவல் சொன்னத வெச்சு ஹோட்டலுக்கு தேடிப் போய் கொலை பண்றாரு கண்ணு தெரியாத கென்னி.  நம்பர் 5 , 4 னு கணக்கு வெச்சு ஹீரோயினிய கொலை பண்ணின வில்லன்கள தேடித் தேடி கொன்னுட்டு, நம்பர் 1 வரவுக்காக காத்திருக்காங்க சஞ்ஜயும், சிவா @ கென்னி @ இன்னும் ரெண்டு பேரு மறந்து போச்சு. memory lossக்கு சஞ்ஜய் போலராய்ட் கேமாரால போட்டோ எடுத்து பேரு எழுதி வெப்பாரு, உடம்புல பச்சை குத்துவாரு - கண்ணு தெரியாத கென்னி எக்கொலேஷன்.

சஞ்ஜெய் ராமசாமிய பத்தி கிசு கிசு பரப்பின பொண்ண திட்டணும்னு அவரு போயிட்டிருக்கிற வழில, கால்வாரி கல்பனா - நடக்க முடியாத குழந்தைகளுக்கு உதவி பண்றத பார்த்ததும் லவ்வாகிப்போகுது. அடுத்து தமிழ்த் திரையுலக  சம்பிரதாயம் 1 படி ஒரு பாட்டு வரணுமே, 'ஒரு மாலை இளவெயில் நேரம்' - கல்யாணமே வேணாம்னு சொல்ற இன்டர்போல் ஆபீசர்(எதோ RAW ஏஜன்ட்டாம்) சிவக்குமார் நேரடியா பொண்ணுகிட்டவே பேசிடலாம்னு போகும் போது நாய்க்குட்டிகளுக்கு குடை குடுத்திட்டு, மழைல நனையுற மீனாட்சி மேல லவ் வருது - சம்பிரதாயம் 1 - 'அனிச்சம் பூவழகி ஆடவைக்கும் பேரழகி'.

ஏதோ கேக்கனும்னு வந்த மொபைல் கம்பெனி ஓனர் சஞ்ஜய், கல்பனாகிட்ட தன்னை நடிப்பு சான்ஸ் கேட்டு வந்த மனோகர்னு காட்டிக்கிறாரு - முதல் இரவுல பேசுறதே தப்பு, இதுல நீங்க சப்-இன்ஸ்பெக்டர்தானே னு கேக்குற மீனாட்சி கிட்ட ஆமா ஆமா னு மண்டைய ஆட்டி வெக்கிறாரு இன்டர்போல் ஆபீசர் சிவா. ஒரு வீடு வாங்கணும், அம்பாசிடர் கார் வாங்கணும்னு லட்சியமா இருக்குற கல்பனாவுக்கு ஹமாம்-ஸ்வீட் ஹோம்ல பரிசு விழுந்ததா ஒரு வீடு பரிசா கொடுக்கிறாரு சஞ்ஜய் - ஐ பவுண்டேசன் ஆரம்பிக்கிறதுதான் லட்சியம்னு இருக்கிற மீனாட்சியோட பெயிண்டிங்க்ஸ்லாம் ஏலத்துல விட்டு அவங்க ஐ பவுண்டேசனுக்காக டொனேசன் வாங்கித் தர்றாரு சிவா. 'நான் உன்கிட்ட ஒரு உண்மைய சொல்லணும்' சஞ்ஜய் லிப் மூவ்மென்ட்க்கு கல்பனா பேசுவா - 'உன்கிட்ட நான் கொஞ்சம் பேசணும்' சிவா லிப் மூவ்மென்ட்க்கு மீனாட்சி பேசுறா.

செகன்ட் ஹீரோயின் இன்ட்ரோ - சித்ரா, தமிழ் சம்பிரதாயம் 2 - 'எக்ஸ் மச்சி, ஒய் மச்சி, எப் எம் மச்சி' - சாரா விநாயகம்- 'யாரடி மோகினி (டப்பிங் பாட்டு)'. ஆமா எதுக்காக இந்த ஹீரோயின்? ஹீரோவோட ப்ளாஷ்பேக்லாம் யாரு கிளறி எடுக்கிறதாம்? தமிழ் சம்பிரதாயம் 3  படி முதல் ஹீரோயினிக்கே 3  பாட்டு, 2  சென்டிமென்ட் சீன்தான் ஒத்துக்குவாங்க. ரெண்டாவது ஹீரோயினிக்கு இதுக்கு மேல வேற என்ன வேணும்? சாரா விநாயகம் - நீங்க வந்தா மட்டும் போதும். கல்பனா முதுகுல கொஞ்சம் தக்காளி சட்னி ஊத்தின வில்லன், இப்போ ஹீரோ - ஹீரோயின் படுத்துகிட்டே கண்ணும் கண்ணும் நோக்கியான்னு சோகமான ரொமான்ஸ் பிழிஞ்சிட்டு இருக்கும் போது 'டங்'னு தலைல தக்காளி சட்னி போட்டுடறான் வில்லன் - பாதி பாம் வெடிச்சு ஹீரோ - ஹீரோயின் படுத்துகிட்டே நோக்கியா பாட்டு பாடும் போது 'டமால்'னு மீதி பாம் வெடிச்சு ஹீரோயின் சிதறிப் போயிடறாங்க. (நமத்துப் போன வெடிகுண்டோ? இன்ஷ்டால்மென்ட்ல வெடிக்குதே?)

யார ஏமாத்தப் பாக்குற அங்க வில்லன் டபுள் ஆக்ட், அவன் வில்லன்னுதான் மொதல்லேர்ந்து காட்டுவாங்க. இங்க அப்படியா? அந்த படம் கூடதான் நல்லா இருந்திச்சு, சூப்பர் ஹிட்டா ஓடிச்சு. இந்தப் படம் ஊத்துகிச்சுதானே? அப்படின்னு கேப்பேன்னு நினைச்சீங்களா? அங்க தான் டைரக்டர்ரர்ர்று வெக்கிறாரு ட்விஸ்ட்ட. மேல்படிப்புக்காக ரஷ்யா போற கவுதம் சுப்பிரமணியம் அங்க ஒரு கொலை கேஸ்ல மாட்டிக்கிறாரு. மொழிப் பிரச்சினைக்கு உதவி செய்யிறதுக்காக ஆர்த்தி சின்னப்பா வர்றாங்க - ஏதோ ரகசிய ப்ளோ சார்ட் கண்டுபிடிக்கிறேன்னு உளவாளியா வர்ற சிவா லண்டன்ல தீவிரவாதியா புனைக்கப் பட்டு மாட்டிக்கிறாரு. அவருக்கு உதவி செய்ய வர்றவங்கதான் கீதா. இப்போ ட்ராக் கரெக்ட் ஆகிடுச்சா? இந்த வில்லன் அந்த வில்லனுக்கு ஒத்துப் போறானா? சொல்லப்போனா கவுதம்க்கு கூட கிராமத்து பிளாஸ்பேக் ஒன்னு இருக்கு ;)

சந்தானம் காமெடி இருந்தும் வேஸ்ட் பண்ணிட்டாங்கப்பா, எமி ஜாக்சனுக்கு இன்னும் கொஞ்சம் நடிக்க வாய்ப்புக் கொடுத்திருக்கலாமேப்பா? அட யார்ரா  இவன், நானே லட்சுமி ராய்க்கு ஒரு குத்துப் பாட்டு கூட இல்லையே னு பீல் பண்ணிட்டு இருக்கேன், செகன்ட் பக்கெட்க்கு ட்ரீட் கேக்குற மாதிரி பேசிகிட்டு இருக்க. எவன்டா அவன் சிங்கம் படத்துல சூர்யா ஸ்டூல் போட்டு நடிச்ச மாதிரி போட்டோ அனுப்பினது? நீ உண்மையான போட்டோஷாப் டேவலப்பர்ணா இப்போ அனுப்பு சீயானுக்கு ஸ்டூல் போட்டு. இந்தப் பொண்ணு உசரத்துக்கு ஹீரோ புடிக்கனும்னா, சத்யராஜும் , அமிதாப் பச்சனையும் தான் புடிக்கணும்.

தாண்டவம் -- காசுக்கு தண்டம் (நன்றி வினய்  ;) )

Wednesday 29 August, 2012

மணப் பாண்டம்…


சிறு துரும்பு, கல்,
கசடு நீங்க
உலர்ந்த மண்ணென சந்தித்தவ,
பதமாய் நீர் சேர்த்து
நம்மைப் பிசைந்து
களிமண்ணென சேர்ந்து கிடந்தவ,
சரியான பதம் பார்த்து
அள்ளியெடுத்து
மத்தியப் புள்ளியில் ஒன்றமர்ந்தவ,
இத்தருணம்
காதல் சக்கரம் சுழலத் துவங்குகிறது
மத்திய அழுத்தம் சீராக்கி
படர்ந்து பரவ
விளிம்பு நோக்கி உரு தரித்தவ,
பொறுமையையும் பொறுமை ஆட்கொள்ள
கவனமே கருத்தென உயரம் வளர்ந்தவ,
தேவை சேர, கழிசல் நீங்க
ஈரப்பதம் சீராக்கி
சுற்றத்தாருக்கும் உருவம் புலப்பட்டவ,
இன்னும்
காதல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது
கருத்தாய் முழு உருவம்
முடிக்கும் தருணம்
ம்ம் எனும் ஒற்றைச் சொல்
உலர்தலுக்காக காத்திருக்கிறோம்
இன்னமும் சக்கரம் சுழற்றிய படி

Monday 30 July, 2012

காதல் சடுகுடு…


காதல் வலியெடுத்து
உடம்பு முழுக்க நோகுதடி,
முத்த ஒத்தடம்
கொடுக்க வேணும்
சீக்கிரமா வாடி புள்ள
$
#*#*#
$
கிளையுதிர்த்த இலையொன்று
கிளையுடனான பற்றுதலை
அசைபோட்டபடி அசைந்து
வீழ்ந்து கொண்டிருக்கிறேன்
தரை தொடும் முன்
தாங்கிப் பிடிக்க வந்துவிடு
$
#*#*#
$
கடிகார மணற்துகளென
உன் நினைவுகள்
கரைந்து கொண்டிருக்கின்றன
சீக்கிரம் என்னைப்
புரட்டிப் போட்டு
நிரப்பிவிடு
$
#*#*#
$
உன் காதல் எனக்கு
கசக்கிறது
கலப்படமில்லா தூய
சாக்லெட் சுவையென
#
#*#*#
$
நித்தம் நித்தம்
வேணான்டி
ஒத்தை முத்தமொன்னு
போதுமிப்போ
பித்தாகிப் போன
இந்தப் பாதகனுக்கு