“நாலு தடவ சொல்லியும் போகாத கழுத இருபது பைசா தாரேன், முட்டாயி வாங்கிக்கோனு சொல்லி முடிக்கங் காட்டியும் ஓடுது பாரு”
பாபுவின் சாமர்த்தியத்தினை அவனது அம்மா விமர்சித்துக் கொண்டிருந்தாள். கடையிலிருந்து திரும்பியவன் கையில் அம்மா சொல்லி அனுப்பிய கோதுமை ரவை பாக்கெட் மட்டும்தான் இருந்தது,
“முட்டாயி எங்கீடா? வாங்குனதுமே தின்னுபோட்டியா?”
அம்மாவின் கேள்விக்கு “இல்லிங்க்மா, ஜோப்பில இருக்குதுங். நாளைக்கு ஸ்கோலுக்கு போறப்ப எதுனா வாங்கிக்றேனுங்” பாபு பதில்.
‘எதுனா’ என்பது என்னவென பாபு அந்த இருபது பைசா வாங்கும் முன்னரே முடிவெடுத்து விட்டான். இதுவரை இப்படி சேர்த்த பைசா இதனோடு சேர்த்து ஒரு முழு ரூபாய். நாளை ஐஸ் மாமாவிடம் சேமியா ஐஸ் வாங்குவதுதான் திட்டம். அம்மாவிடம் ரவை பாக்கெட் கொடுத்துவிட்டு, பைசாவினை பென்சில் பெட்டியின் அடியில் உள்ள மயிலிறகுக்கு அருகில் சேர்த்தான்.
“ம்மா விளையாடப் போயிட்டு வரேனுங்”
அனுமதி எனும் பெயரில் தகவலைச் சொல்லிவிட்டு
“சக்கிலி வளவு பக்கமா உன்னைய பார்த்தேன்னா, உங்கப்பாருகிட்ட சொல்லி டின்னு கட்டிபோடுவேன்”
அம்மாவின் உத்திரவு/எச்சரிக்கை காற்றில் கரைவதற்குள் பாபு தெருவிலிருந்து மறைந்திருந்தான். விளையாடி வீடு திரும்பியதும் ஒருமுறை, இரவு உணவுக்குப் பின் ஒருமுறை, உறங்கும் முன் ஒருமுறை என மூன்று ரூபாய் அளவிற்கு எண்ணி முடித்தான். கனவினில் நாளைய சேமியா ஐஸ் வந்திருக்குமா தெரியாது, ஆனாலும் நன்றாகவே உறங்கிப் போனான்.
காலையில் பள்ளியில் எல்லோரும் நீராருங் கடலுடத்த வென தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடிக் கொண்டிருக்க, பாபு மட்டும் மதிய உணவு இடைவேளை எப்பொழுது வருமென சுவர்க் கடிகாரத்தினை விரட்டியபடி அவன் வயதுக்குரிய தேசத் துரோகமொன்று செய்து கொண்டிருந்தான். 12 .30 மதிய உணவு இடைவேளை – பத்து நிமிடத்தில் லஞ்ச் பாக்ஸ் காலி செய்து விட்டு, ஐஸ் மாமா வரும் வழி நோக்கி விரைகிறான். மாமா வரும் வரை அவனுக்கு விளையாட்டில் கவனமே இல்லை, ‘பாம் பாம்’ என எங்கோ ஹாரன் பிளாடர் அழுத்தும் சத்தம் பாபுவிற்கு நீரில் மூழ்கிக் கொண்டிருப்பவனுக்கு ஆதாரமாய்க் கிடைத்த கயிறென ஒலிக்கிறது. ‘ஏனுங் மாமா இன்னைக்கு இவ்ளோ லேட்டு?’
என தேனடையைச் சுற்றிய தேனீக்களாய் ஐஸ் வண்டியைச் சுற்றியது கூட்டம்.
“நானு என்னுமோ எங்க்கூட்லேர்ந்து ஐஸ் பண்ணி விக்கிரவனாட்ட கேக்குதுங்க பாரு. ஐஸ் கம்பேனிக்கு போயி பாக்ஸ் பேக் பண்ணி கொண்டார வேணாமாடா கண்ணுகளா? எப்பியும் சீக்கிரமா போற 12 மணி ரெயிலு இன்னைக்கு லேட்டு ஆயிப்போச்சாட்ட இருக்குது. நா வர்றப்பதேன் ரயிலு கேட் போட்ருந்தான். நானு என்ன புட்டுர் பைக்கா வெச்சிருக்கேன்? 2 மைலு போயி சுத்திட்டு வர்றதுக்கு? அதாண்டா லேட்டு. மாமாக்கு ஆராய்ச்சு தண்ணி தாங்கடா, வெயில்ல பெடலு முதிச்சு தொண்ட தண்ணி வத்தீருச்சு”
ஐஸ் மாமாவின் தாகம் தீர்க்க வாட்டர் பாட்டிலுடன் தண்ணீர் டாங்க் நோக்கி ஓடிய நான்கு வாண்டுகளில் முதல் வாண்டு யாராக இருக்குமென உங்களுக்கு சொல்லித்தான் தெரியுமா? “அடிச்சுக்கிடாம ஒவ்வொருத்தரா கேளுங்க கண்ணுகளா. எல்லாருக்கும் மாமா, ஐஸ் வெச்சிருக்கேன்டா. பாலைஸ், கப்பைஸ், கோனைஸ்” –
-ப்ப்பாம், ப்ப்பாம்-
– “மாமா ஒரு சேமியா ஐசுங்”
பாபு குரலுக்கு தலை நிமிர்ந்த ஐஸ் வண்டி “என்னடா கண்ணு நல்லாருக்கியா? இன்னைக்கு காசு சாஸ்தி சேத்துப் போட்டியாட்ட இருக்குது. அம்பது பைசா மேங்கோ ஐஸ் வாங்காம, ஒர்ரூபா சேமியா ஐஸ் கேக்குற?” –
ஐஸ் வண்டிக்கு பாபு மேல் மட்டும் தனிப் பிரியம். சேமியா ஐசினை காதலிக்கும் வயது பாபுவுக்கு. மழை நாளொன்றில் தலை நனைவதைக் காக்க பாலித்தீன் பையினை தலையில் சுற்றி இறுக்கம் தளர்த்த முடியாமல் போட்டோவாகிப் போன ஐஸ் வண்டி மாமாவின் மகனின் பெயர் பாபுவாக இருந்திருக்கலாம் என்பதான சென்டிமென்ட் புரிய வாய்ப்பில்லை..
இன்று பாபுவின் நண்பர்களுக்கு வழக்கமாய்க் கிடைக்கும் அந்த காக்கா கடி ஐஸ் துண்டு கிடைக்காது எனத் தெரியும். இது அவன் எப்பொழுதும் வாங்கும் மேங்கோ ஐஸ் இல்லையே, அவனுக்கு மிகப் பிடித்த சேமியா ஐஸ் ஆயிற்றே. காதலர்களை தொந்திரவு செய்வதில் நண்பர்களுக்கு என்றுமே விருப்பம் இருந்ததில்லை. பாபுவும் அவனது ‘ஐஸ்’-ம் தனிமையின் சுகத்தில் உருகிக் கொண்டிருந்தனர். ஐஸ் வண்டி – இப்படித்தான் அந்த ஊரில் அவரை எல்லோருக்கும் தெரியும்.
‘இந்தாப்பா ஐஸ்’ ‘ஏய் ஐஸ்’ ‘ஐஸ் வண்டிக்காரரே’ ‘ஐஸ் ஐஸ்’ என்றுதான் அவர் கேட்டு பழக்கப் பட்டிருக்கிறார். சென்ற வருட மாரியம்மன் கோவில் திருவிழா நன்கொடை வரவு நோட்டில் ‘ஐஸ் வண்டிக்காரர் - ரூ 5 .25 ‘ என்ற பத்திரப் பதியமும் இவரை விட்டு வைக்கவில்லை. கோடை விடுமுறை நாளொன்றில் வீட்டருகே ஐஸ் மாமாவிடம் மேங்கோ ஐஸ் வாங்கிய போது அம்மா வந்து கேட்டது
“அடதேனப்பா ஐஸ் வண்டி, நீங்க என்ன சனம்?”
சட்டென மாமாவின் முகம் மாறியதின் காரணம் பாபுவுக்கு விளங்கவேயில்லை. இதே போலத்தான் பல சமயங்களில் மாகாளி புறக்கடை பக்கமாக மட்டுமே வருவதும், அவருக்கென புறக்கடை கூரையில் சொருகியிருக்கும் ஈயத் தட்டு, குவளை பற்றியும், அவர் தன்னை தேவுரே(கடவுளே) என அழைப்பதற்கும் பாபுவிற்கு என்றுமே விளங்கியதேயில்லை சில பருவம் கடக்கும் வரையில்.
மொத்தப் பள்ளிக்கே அரை சதத்திற்கும் குறைவான எண்ணிக்கை கொண்ட மாணாக்கர்களுக்கு துவக்கப் பள்ளி வரை மட்டுமே வாய்க்கப்படிருந்தது அந்த அழகிய கிராமத்திற்கு. அதிகம் படிக்க வைப்பதற்கோ, சத்துணவு இல்லா விட்டால், வீட்டினில் உணவு அளிக்கும் அளவிற்கோ வசதி வாய்ப்பில்லாத ஏனைய குடியானவர்களுக்கு தங்களது பிள்ளைகளை கட்டிட வேலைக்கோ, தறிப் பட்டறைக்கோ, பனியன் கம்பெனிக்கோ அனுப்புவது மட்டுமே விதிக்கப் பட்டிருந்தது. மச்சு வீட்டுப் பிள்ளைகளுக்கு அது திருத்தி எழுதப் பட்ட விதி. பாபுவைப் போல, சீரான சட்டங்களின் மேல் அடுக்கிய ஓடுகள்/சிமெண்ட் கூரைகளில் தினமும் கண் விழிக்கும் தவப் புதல்வர்கள் மட்டும் துவக்கப் பள்ளி கடந்து கல்வி தொடரலாம். இப்பொழுது பாபுவின் பள்ளிக்கு எதிரேதான் ஐஸ் கம்பெனி என்பதால், அவ்வப்போது மட்டும் பாபு ஐஸ் மாமாவினை சந்திக்க முடிந்தது. அதுவும் அந்த இடத்தில் பேக்கரி வரும் வரையில் தான். அதன் பிறகு ஐஸ் மாமாவினை பாபு சந்திக்கவேயில்லை.
அரைக்கால் சட்டையிலிருந்து – முழுக்கால் சட்டை, பிளாஸ்டிக் பாக்சிலிருந்து – நடராஜ் ஜியாமட்ரி பாக்ஸ், வால் சொடுக்கினால் தலையை நீட்டும் பால் பாய்ன்ட் பேனாவிலிருந்து – ஹீரோ பேனா என பாபுவின் மாற்றங்களுக்கான பட்டியல் நீண்டது. பள்ளிச் சீருடையிலிருந்து சாதாரண உடை, வியாழக் கிழமை சந்தையில் வாங்கிய செருப்பிலிருந்து பெல்ட் செப்பல், ஒட்ட வெட்டிய கேசத்திலிருந்து ஹீட்டர் வைத்து படிய வாரிய தலை, ஜீன்ஸ், ஒன்-சைடு காலேஜ் பேக், கையில் காப்பு என பாபு வளர்ந்து மாற்றம் பெற்றதுடன், அவன் பார்த்து வளர்ந்த கிராமமும் – வாழைத் தோப்புகளில் வரிசையாக கல் முளைத்து அவென்யூக்களும், மிதிவண்டி/மாட்டு வண்டித் தடங்களில் டி.வி.எஸ் மொபட்டுகளும், பரம்பரைத் தொழில் கொண்டே பெயர் சூட்டப் படும் பலரும் இன்று சாரை சாரையாய் பனியன் மில் ஊழியர்களாயும் மாற்றங் கண்டு விட்டனர்.
கல்லூரி விழா சம்மந்தமாக ஒரு நாள் பாபு டவுன் வந்த போது, எதேச்சையாக ஐஸ் மாமாவினைச் சந்தித்தான்.
“மாமா எப்படி இருக்கீங்? அடையாளம் தெரியுதுங்களா? நாந்தானுங் மாமா பாபு”
குரலோ, உருவமோ அவருக்கு பிடிபடாவிடினும், பெயர் மட்டும் அவனை நன்றாக நிலைக்காட்டியது.
“நல்லா இருக்கியா கண்ணு? எத்தசோடு வளந்துட்டடா? அடையாளமே தெரீலப்பா. நீயாவது அடையாளங்கண்டியே ”
மாமாவின் நரையினையும், தடித்த மூக்குக் கண்ணாடியும் ஆச்சரியமாய்ப் பார்த்த படி “இப்போ என்ன பண்றீங் மாமா. ஐஸ் இன்னும் இருக்குதுங்களா?”
வெறுமையான சிரிப்பொன்றினை உதிர்த்து விட்டு
“இல்லீடா கண்ணு. சைக்கிள் முதிக்க முடியலன்னு மொபட்டு வாங்கி, அதுக்கு எண்ணெய் ஊத்த முடியாம, கம்பெனி ஓனரும் நட்டத்துல எத்தன நாள் நடத்துறதுன்னு கடைய வித்துப் போட்டாரு. நானும் அங்க இங்க சுத்திப்போட்டு கடைசியா பனியன் மில்லே கதின்னு வந்திட்டேன்”
அதன் பிறகு இருவருமே என்ன பேசலாமென மௌனமாய் விவாதித்துக் கொண்டிருந்தனர். தன் நிறுத்தத்திற்கு முன்னதாக இருக்கையிலிருந்து எழுந்த மாமாவிடம் பாபு
“மாமா உங்க பேரு என்னங் மாமா?”
பாபுவின் தோளில் கை பதித்து சொன்னார்
“முருகேசன்-டா கண்ணு, ஐஸ் வண்டி முருகேசன்”
No comments:
Post a Comment