Friday, 8 November, 2013

வெங்காயக் கதை

இக்ரான் தற்பொழுது அவனுக்கு நன்றாகவே பழகியிருந்தது. பறக்க எத்தனிக்கையில் உள்ளூரக் கிளம்பும் பயமோ, அதன் அதிர்வினால் இக்ரானின் கொம்புகளை இறுகப் பற்றும் பதட்டமோ இல்லை. பண்டோராவின் மேகங்களில் விளையாடிக் கொண்டிருந்தான். தனது மூளையின் சிந்தனையே, இக்ரானையும் இயக்குவதால் அவனது ஆனந்தமும், தைரியமும் இக்ரானின் பறக்கும் வேகத்திலும், வான் சாகசங்களிலும் தெளிவாய்த் தெரிந்தது. ஒரு மேகக் கூட்டம் நுழைந்த போது ஒரு நுண்ணதிர்வுடன் இக்ரான் பதற, மின்னலென குறுக்கே நுழைந்த டோரக் அவர்களை இடித்துத் தள்ளியது. இக்ரானும், அவனும் தனித்தனியே சுழன்றபடி வீழ்ந்து கொண்டிருந்தபோது, திரை முழுக்க இருள் பரவியிருந்தது. மடிக்கணினியில், ப்ளேயரின் சீக் பாரினை அடுத்த 2-3 நிமிடங்களுக்கு கடத்தியபடி

"இந்த மாதிரி கீழ விழுந்தா நமக்கு முழிப்பு வந்திரும்லடா, அதான் கட் ஆகிடுச்சு" எனக் கூறி முடித்தான் சிஜூ.

அவர்களது கல்லூரி காபிடீரியா- அவனுடன் அமர்ந்திருப்பது அவனது உறவினர்கள். சிரித்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள், அடுத்த காட்சி அவனது சொந்த ஊரில் அவன் வீட்டின் அருகிலுள்ள ஒரு மைதானத்தில் நிகழ்கிறது-ஆனால் அங்கு விளையாடிக் கொண்டிருப்பது அவனது விடுதித் தோழர்கள். அவனுக்குத் தெரிந்த மனிதர்களே, சம்மந்தமில்லாத சூழ்நிலைகளில் பயணப்படுவதான காட்சிகள் - பின் மீண்டும் திரையில் இருள்.

"இந்த ரெண்டாவது கனவு அவ்ளோ தெளிவா இல்லடா. எங்கெங்கயோ போச்சு, அப்புறம் முழிச்சிட்டேன், 3 மணிக்கே. அதுக்கு அப்புறம் தூக்கமே வரல" - சிஜூ.

"நேத்து லேப்ல ரொம்ப வேலையா? நைட் வீட்டுக்கு போன் பேசிட்டு தூங்குறதுக்கு முன்ன அவதார் படம் பார்த்தியா? உன்னோட கனவுகள் அததான் சொல்லுதுடா. கனவுகள பதிவு பண்ற கருவி பத்தின உன்னோட ஆராய்ச்சி எனக்கு பிரமிப்பா இருக்கு. ஆனா போன தடவ உன்னோட தியரி பிரசண்டேசன்க்கு கிடைச்ச ரெஸ்பான்ஸ் நியாபகம் இருக்கில்ல? இந்த புராஜெக்ட்தான் உன்னோட லைப். மத்தவங்க இந்த வீடியோவெல்லாம் பார்த்து சிரிச்சா கூட பரவாயில்ல, உன்னோட எதிர்காலமே சிரிச்சிடாம பார்த்துக்கோ. இந்த கார்ட்டூன் அவுட்புட் பதிலா, ரியல் டைம் அனிமேசன் மாதிரியாவது டிரை பண்ணிப் பாரு. உனக்கு முழு நம்பிக்கை வந்ததுக்கு அப்புறம் இன்னொருத்தர் யாரையாவது வெச்சு, அவங்களோட கனவுகள படம் பிடிச்சு காட்டு. கண்டிப்பா என்னோடத முதல்ல. ஆனா மூணாவது மனுஷன் ஒருத்தன் பரிபூரணமா இத ஒத்துக்கணும். அவனோட கனவுதான் திரையில வந்திச்சுன்னு 100% ஒத்துக்கணும். அங்கதான் இருக்கு உன்னோட வெற்றியே. இன்னும் உனக்கு நிறைய டைம் இருக்குதானே?"

தனது முயற்சிகளின் முதல் கட்ட முடிவுகள் குறித்த ஆரோக்கியாவின் கருத்துகளை கேட்டுக் கொண்டிருந்தான் சிஜூ.

அடுத்... என எழுதிக் கொண்டிருக்கும் போதே, பூபதியின் எழுதுகோல் முள் உடைந்து போனது. எப்பொழுதும் தனது கதைகளை கரி எழுதுகோலில் எழுதுவதே அவனுக்கு வழக்கம். மையினால் எழுதினால் ஆங்காங்கே பிழைத் திருத்தங்கள், தெள்ளத் தெளிவாய்த் தெரிந்து விடும். அழிப்பான் இருக்க பயமேன்? வார நாவல் ஒன்றில் எழுத்தாளராகப் பணியாற்றும் இவனுக்கு அறிவியல் புதினங்கள் கை வந்த கலை. தற்போது பிரசுரமாகிக் கொண்டிருக்கும் தொடர்கதை ஒன்று, இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவாகிவிடும் என்பதால் அடுத்த படைப்புக்கான கதைக்களத்தில் இறங்கியிருக்கிறான். எழுதுகோலினை மீண்டும் கூர் செய்து முடித்த போது, கதவு தட்டப்படும் ஓசை கேட்டு வாசல் அணுகினான்.

கதவு திறந்ததும், சைலன்சர் பொருத்தப்பட்ட பிஸ்டல் காரி உமிழ்ந்த தோட்டா ஒன்று அவனது சட்டைப் பைக்கு அருகாமையில் உள் நுழைந்து இதயம் தொட்டதின் அடையாளமாக, குருதி வழிய பூபா தரையில் சாய்கிறான்.

அச்சு அசலாக தன்னைப் போலவே ஒருவன், குளிர் கண்ணாடியினைக் கழற்றியபடி, பிஸ்டலை பின் இடுப்பில் செருகிக் கொண்டு, உள்ளே நுழைவதை வெறித்தபடியிருக்க, வழிந்த குருதி தரையில் 'இடைவேளை' என வரைவது திரையில் மிளிர்கிறது. திரையரங்கினுள் வெளிச்சமும் சலசலப்பும் பரவ, குமார் - உமாவிடம் "பாப்கார்ன் வாங்கிட்டு வர்றேன்மு" எனக் கூறிவிட்டு இருக்கைகள் கடந்து வெளியேறுகிறான்.

No comments:

Post a Comment