Wednesday 27 October, 2010

நீதான் என் தேசியகீதம்…

உனக்குள் என்னையும், எனக்குள் உன்னையும்
புதைத்துதான் நம் காதல் விதை வளர்கிறது என்கிறாய்…
அது நம்மால் மட்டுமின்றி நம் பெற்றோரால்
நீருற்றி வளர்த்திடப் படவேண்டுமென்கிறாய்…

உன்னை எனக்கும், என்னை உனக்கும் பிடித்துப் போனதைவிட
என்னை உன் வீட்டவர்க்கும், உன்னை என் வீட்டவர்க்கும்
பிடித்துப்போக வேண்டுமே என கவலை கொள்வாய்
பிறகு நீயே, ‘கண்டிப்பா பிடிக்கும்டா! எல்லார்க்கும்’
என நம்பிக்கையுடன் தோள் சாய்ந்து முகம் புதைப்பாய்…

ஒருவேளை நாம் நினைத்தபடி அவர்களுக்கு பிடிக்காது போயிடின்?
என சில நிமிடங்கள் கவலை கொள்வாய்- பின் நீயே,
‘ச்சே ச்சே. ஏண்டா இப்படி தப்பு தப்பாவே நினைக்கிறே?’ என
என்னைக் கடிந்துகொள்வாய்…

இருநாட்கள் உண்ணாவிரதம், அம்மாவிடம் புரியும்படி பேசி
சம்மதிக்கவைப்பது, அப்பாவையும் அம்மா மூலமாக கவிழ்ப்பது
என உனது வீட்டிற்கான உனது யோசனைகளையும் அவை நிச்சயம்
வெற்றி பெறும் எனும் உனது நம்பிக்கையையும் கூறிவிட்டு…

‘உங்க வீட்ல என்ன பிடிக்குமாடா?’ என குழந்தையாய்க் கேட்கிறாய்,
உன்னுடன் பழகிய நாட்களில், எனக்கு உற்ற துணையாய் நீ இருப்பாய்
என்பதை விட, என் பெற்றொருக்கு நல்லதோர் மருமகளாய் இருப்பாய்
என நம்பிக்கை கொண்டே நம் காதல் விதையை நான் விதைத்தேன்
என்பதை எப்படி உனக்கு உணர்த்துவேனடி???

காதலியில்லாக் காதல்…

உறங்கியதும் கனவுத்திரை விரிகிறது,
தோழர்கள், தோழிகள், உறவினர்கள் என
விளையாடிட வருபவர்களிடமெல்லாம்
‘அவள் வரும் நேரமிது. மன்னியுங்கள்’ எனக்
கூறி வழியனுப்பிவிடுகிறேன், என்றுமே வந்திடாத
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

வேகத்தடைப் பயணம், கூட்டமில்லா திரையரங்கம்
கிழக்குக் கடற்கரை சாலையில் குழம்பியகம்
மெல்லிய சாரலில் நெடுந்தூரப்பயணம் என
ஒவ்வொன்றும் உன் நினைவை தூண்டிடத் துடிக்கின்றன
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

இந்தப் பதிவில் உன் பெயரினை அறிவித்திட வேண்டும்
அடுத்த பதிவிலாவது நிச்சயம் அறிவித்தேயாக வேண்டுமென
எனக்குள் நானே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயர் கூட எனக்குத் தெரியாத
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

உனக்காக எழுதப்பட்ட குறுந்தகவல்கள்
காதலர் தினங்களில் வாங்கப்பட்ட பரிசுகள்
உன்னுடன் பகிர்வதற்கான சந்தோஷங்கள், துக்கங்கள்
என அனைத்துமே உனக்காக காத்திருக்கின்றன
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

இத்துனை நாளாய் கிறுக்கிய கிறுக்கல்கள் யாருக்கானவை
எனக் கேட்டிடும் நட்பு வட்டங்களிடம் கூறாவிடினும்
‘உனக்காகத்தான்’ என உன்னிடமாவது கூறிவிடத் துடிக்கிறேன்
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

குறுந்தகவல்கள்…

எடுக்க ஆளில்லாமல் கதறும்
                      அழைப்பு மணியோசை நான்
யாருமில்லா நேரம் மீண்டும் மீண்டும்
                           அழைத்திடும் அழைப்புகள் நீ
‘34 தவறிய அழைப்புகள்’ என
                          திரையில் காட்டிடும் தகவல் நம் காதல்
#
உறக்கம் வர அழுதிடும் குழந்தை நான்
தொட்டிலிட்டு எனைத் தாலாட்டும் அன்னை நீ
உறக்கத்தில் தேவதை கண்ட குழந்தையின்  புன்சிரிப்பு நம் காதல்
#
பறக்கத் துடிக்கும் இராக்கெட் பட்டாசு நான்
என் திரியினைக் கொளுத்திடும் மத்தாப்பு நீ
வெடித்துச் சிதறிடும் வாணவேடிக்கை நம் காதல்
#
இன்னிசைப் பாடல்களின் இசைத்தட்டு நான்
என்னுள் எழுதியதை படித்திடும் மிண்ணனு இயந்திரப் பெட்டி நீ
பொத்தானை அழுத்தியதும் கேட்டிடும் இன்னிசை நம் காதல்
#
சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி நான்
எனைக் கவர்ந்திழுக்கும் அழகிய பூ நீ
என்னால் சுமக்கப்படும் மகரந்தம் நம் காதல்
#
அகல் விளக்கு நான்
என்னுள் ஊற்றிய நெய் நீ
நம்மால் ஒளியூட்டப்பட்ட சுடர் நம் காதல்
#
நட்டு வைத்த விதை நான்
என் மேல் ஊற்றிடும் நீர் நீ
நம்மால் வளர்ந்திடும் செடி நம் காதல்