Wednesday 27 October, 2010

நீதான் என் தேசியகீதம்…

உனக்குள் என்னையும், எனக்குள் உன்னையும்
புதைத்துதான் நம் காதல் விதை வளர்கிறது என்கிறாய்…
அது நம்மால் மட்டுமின்றி நம் பெற்றோரால்
நீருற்றி வளர்த்திடப் படவேண்டுமென்கிறாய்…

உன்னை எனக்கும், என்னை உனக்கும் பிடித்துப் போனதைவிட
என்னை உன் வீட்டவர்க்கும், உன்னை என் வீட்டவர்க்கும்
பிடித்துப்போக வேண்டுமே என கவலை கொள்வாய்
பிறகு நீயே, ‘கண்டிப்பா பிடிக்கும்டா! எல்லார்க்கும்’
என நம்பிக்கையுடன் தோள் சாய்ந்து முகம் புதைப்பாய்…

ஒருவேளை நாம் நினைத்தபடி அவர்களுக்கு பிடிக்காது போயிடின்?
என சில நிமிடங்கள் கவலை கொள்வாய்- பின் நீயே,
‘ச்சே ச்சே. ஏண்டா இப்படி தப்பு தப்பாவே நினைக்கிறே?’ என
என்னைக் கடிந்துகொள்வாய்…

இருநாட்கள் உண்ணாவிரதம், அம்மாவிடம் புரியும்படி பேசி
சம்மதிக்கவைப்பது, அப்பாவையும் அம்மா மூலமாக கவிழ்ப்பது
என உனது வீட்டிற்கான உனது யோசனைகளையும் அவை நிச்சயம்
வெற்றி பெறும் எனும் உனது நம்பிக்கையையும் கூறிவிட்டு…

‘உங்க வீட்ல என்ன பிடிக்குமாடா?’ என குழந்தையாய்க் கேட்கிறாய்,
உன்னுடன் பழகிய நாட்களில், எனக்கு உற்ற துணையாய் நீ இருப்பாய்
என்பதை விட, என் பெற்றொருக்கு நல்லதோர் மருமகளாய் இருப்பாய்
என நம்பிக்கை கொண்டே நம் காதல் விதையை நான் விதைத்தேன்
என்பதை எப்படி உனக்கு உணர்த்துவேனடி???

1 comment: