Wednesday, 27 October 2010

குறுந்தகவல்கள்…

எடுக்க ஆளில்லாமல் கதறும்
                      அழைப்பு மணியோசை நான்
யாருமில்லா நேரம் மீண்டும் மீண்டும்
                           அழைத்திடும் அழைப்புகள் நீ
‘34 தவறிய அழைப்புகள்’ என
                          திரையில் காட்டிடும் தகவல் நம் காதல்
#
உறக்கம் வர அழுதிடும் குழந்தை நான்
தொட்டிலிட்டு எனைத் தாலாட்டும் அன்னை நீ
உறக்கத்தில் தேவதை கண்ட குழந்தையின்  புன்சிரிப்பு நம் காதல்
#
பறக்கத் துடிக்கும் இராக்கெட் பட்டாசு நான்
என் திரியினைக் கொளுத்திடும் மத்தாப்பு நீ
வெடித்துச் சிதறிடும் வாணவேடிக்கை நம் காதல்
#
இன்னிசைப் பாடல்களின் இசைத்தட்டு நான்
என்னுள் எழுதியதை படித்திடும் மிண்ணனு இயந்திரப் பெட்டி நீ
பொத்தானை அழுத்தியதும் கேட்டிடும் இன்னிசை நம் காதல்
#
சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி நான்
எனைக் கவர்ந்திழுக்கும் அழகிய பூ நீ
என்னால் சுமக்கப்படும் மகரந்தம் நம் காதல்
#
அகல் விளக்கு நான்
என்னுள் ஊற்றிய நெய் நீ
நம்மால் ஒளியூட்டப்பட்ட சுடர் நம் காதல்
#
நட்டு வைத்த விதை நான்
என் மேல் ஊற்றிடும் நீர் நீ
நம்மால் வளர்ந்திடும் செடி நம் காதல்

No comments:

Post a Comment