ஊரெல்லாம் அடைமழை - அதன் விளைவால்
என் மனமெல்லாம் உன் நினைவு மழை
மழையில் நனைந்தபடி நடப்பது உனக்கு மிகவும் பிடிக்கும்
எனக்கும்தான் - உடன் கைகோர்த்து நடப்பது நீயென்றால்…
*************************************************************
இதோ இப்பொழுதும் மழையில் நனைந்தபடி நடக்கிறேன்
ஆனால்,”அவளின்றி நீ மட்டும் ஏன் தனியே?”
என் ஒவ்வொரு மழைத்துளியும் என்னைத்
தொடவில்லை - சுடுகிறது…
*************************************************************
எப்போதும் நடக்கையில் பொது இடமென்று
கை மட்டும் கோர்த்து நடப்பாய்
மழையில் நடப்பதென்றால் மட்டும் தோள் சாய்வாய்
அதற்காகத்தான் சரியாக 5 அடி 5 அங்குலமே வளர்ந்தாயோ?
உன் சிரம் என் தோள் சாயும் உயரத்திற்கு?
*************************************************************
“மழை வரும் போல இருக்கு. குடை எடுத்திட்டு வரேன்”னு
சொன்னேல - எங்கடா? என்றேன் நான்.
“இதோ இங்கே” என சிரித்தபடி போர்த்தினாய் துப்பட்டாவை
தூறல் ஆரம்பித்ததும் நடந்தோம் சிறிது தூரம்
“குளிருதுப்பா” என நெருங்கினாய் என்னருகே
அங்கே நம்மிடையே புகுந்து வெளியேற முயன்ற
காற்றும் தோற்றுத்தான் போனது! ‘குளிருக்கு நன்றி’
உறவுகளுக்கும் ரத்த பாசங்களுக்கும் தர விருப்பமில்லை
உனக்கு மட்டும், உனக்காக மட்டுமே தருவதே என் விருப்பம்
என்னிடமிருந்தால் பாசத்தில் தந்துவிடுவேன் - அதனால்
நீயே பத்திரமாக வைத்துக்கொள் எனது இதயத்தை
நான் வேண்டுமானால் மற்றவர்களிடம் பொய் சொல்லிக்கொள்கிறேன்
‘அதை துலைத்துவிட்டேன். துலைத்த இடம் மறந்துவிட்டேன்’ என
#############################################################
மறக்க முடியா நிகழ்வு எதுவென கேட்பவர்களுக்கு
எத்துணைதான் சொல்வது? உன்னுடனிருந்த ஒவ்வொன்று நொடியையும்?
வேண்டுமானால் கடைசியாக நடந்தது என இதைச் சொல்லிவிடவா?
சென்ற வாரம் உலகம் அழிவதைப் பற்றி சொல்லும் திரைப்படத்திற்கு
இரவுக்காட்சிக்கு ‘தேவி’ திரையரங்கம் போய் வந்ததை?
திரைப்படம் முடிந்து நள்ளிரவு 1 மணிக்கு
யாருமற்ற மவுண்ட் ரோட்டில் நீயும் நானும் மட்டும் பயணிக்க
இரவு பெய்துவிட்டு போன மழை குளிர் காற்றை மிச்சம் விட்டுப் போயிருக்க
வேகமாகப் போனால் உன்னுடனான பயணமும்
வேகமாய் முடிந்திடுமே என மிதவேகத்தில் பயணம் தொடர
எதுவும் வேண்டாமென சிகப்பு விளக்குமின்றி,
எது வேண்டுமானாலும் செய்யென பச்சை விளக்குமின்றி,
அழகாய் காதல் செய்யென மஞ்சள் விளக்குமட்டும்
அணைந்து அணைந்து எரிந்தபடி சிக்னல்களும் சிம்பாலிஸம் காட்ட
குளிரை விரட்டுவதாய் (குளிருக்கு நன்றி) மிக லாவகமாய்
நீ இறுக்கி அணைத்த போது உன் ஸ்பரிசமும் கதகதப்பும்
போதும் எனக்கு என் மீதான் உனது காதலை புரிந்து கொள்ள…
No comments:
Post a Comment