Sunday 13 June, 2010

யாருக்காக???

அன்பான மனைவி. அழகான மகன். இதை விட ஒரு மனிதனுக்கு வாழ்வில் வேறு என்ன வேண்டும்? மகன் பிறந்ததும் அப்பாக்களுக்கு சற்று பொறுப்பு கூடும் அல்லவா? அப்படித்தான் அவருக்கும் கூடியது. "என் மகன் வளர்ந்து பெரிய ஆள் ஆவது இந்த ஓட்டு வீட்டிலா? கூடாது! அவன் தவழ்ந்து, நடக்க ஆரம்பித்து, ஓடி விளையாடுவதற்குள் புதிதாக வீடு கட்ட வேண்டும்"
திருமணத்திற்கு வாங்கிய கடனே இப்பொழுதுதான் அடைத்தோம். வீடு எப்படி கட்டுவது? "வீடு கட்டணுமா? '******' வங்கிக்கு வாங்க! வீட்டு மனைக்கடன் வாங்கி, சந்தோஷமா வீட்டைக்கட்டுங்க" விளம்பரம் ஞாபகம் வர வங்கியை அனுகினார். அவர் பார்ப்பது ஆசிரியர் பணி, அரசாங்கப் 
பள்ளியில். வங்கியில் கடன் தரவா மறுத்துவிடப் போகிறார்கள்?

பெரியவர்களிடம் கேட்டால் "இப்போ என்ன அவசரம்? 2 வருசம் போகட்டும். அதுக்குள்ள உன்ற சம்சாரத்துக்கும் seniority லTeacher வேலை கெடைச்சுடும். அப்போ லோன் வாங்கி கட்டிக்கலாம்" என அவர்களது அனுபவத்தில் கூறினார்கள். 

"2 வருசமா? அதுக்குள்ள பையன் வளர்ந்துருவானே. கூடாது. இப்பவே லோன் வாங்கனும். பையன் நடக்க ஆரம்பிக்கும் போது புது வீடு கட்டியாகணும். அவன் ஓடியாடி விளையாடுறது அந்த புது வீட்லயாதான் இருக்கணும்" தீர்க்கமான முடிவுடன், இருந்த பழைய வீட்டை இடித்து விட்டு அங்கு புதிய வீட்டு வேலைகளை ஆரம்பித்தார்.

எந்த வீடு நினைத்த பட்ஜெட்டில் கட்டி முடிந்து இருக்கிறது? நினைத்ததை விட 1-2 லகரங்கள் அதிகமாகவே செலவானது. பட்ஜெட்டுக்கு வங்கிக்கடன், அதிகமாக ஆன செலவுக்கு நட்பு வட்டாரங்கள் என ஒரு வழியாக வீட்டைக் கட்டி முடித்தார்.

தவழ்ந்து கொண்டிருந்த மகன், நடக்க ஆரம்பித்து விட்டான். அப்பா நினைத்ததை சாதித்து விட்டார். மகனும் புது வீட்டில் விளையாட ஆரம்பித்துவிட்டான். ஆனால், இப்பொழுதெல்லாம், வாங்கும் சம்பளத்தில் பெரும்பகுதி வங்கிக்கடனை அடைக்கவே சரியாக இருக்கிறது. மாதக்கடைசியில் வீட்டுச்செலவுகள் கையைக் கடிக்கிறதே? என்ன செய்யலாம்?
"மகன்தான் இப்பொழுது நடக்க ஆரம்பித்துவிட்டானே, நீ ஏன் தற்காலிகமாக ஏதாவது ஒரு தனியார் பள்ளிக்கு போகக்கூடாது?" மனைவியிடம் விண்ணப்பம். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு மனைவியும் அருகிலிருக்கும் தனியார் பள்ளிக்கு போக ஆரம்பித்துவிட்டாள்.
மகன் சந்தொஷமாக ஒடுகிறான், ஆடுகிறான், துள்ளி விளையாடுகிறான் - பாட்டியின் வீட்டில். நல்ல வேளை, இருவருக்கும் ஆசிரியர் பணி என்பதால் 'சனி, ஞாயிறு' இரண்டு நாட்கள் அன்பு மகனுடன் கழிக்க முடிகிறது அவனது பாட்டி வீட்டில்.

புது வீடு???(தலைப்பு…)

No comments:

Post a Comment