Tuesday, 13 July, 2010

அஸ்கலக்கடி லாலாசுந்தரி…

“தம்பி இங்க வாப்பா. உன்னோட வலது கையால தலைய சுத்தி இடது காதை தொடு பாக்கலாம். ம்ம் கை முட்டுதா, அப்போ உன்ன சேர்த்துக்கலாம்” இப்படி சொல்லிட்டு பல்பத்தை(சிலேட் பென்சில்) பால்ல தொட்டு நாக்குல ‘அ’ போட்டாரு முருகையன் ஹெட்மாஸ்டர். இப்படிதான் நான் ஒண்ணாவது சேரும் போது ஊ.ஒ.து (ஊராட்சி ஒன்றிய துவக்கப்) பள்ளியில சேர்த்தாங்க.

அதுக்கு முன்னாடி ஒரு வருஷம் பால்வாடி(அரை க்ளாஸ்-பேபி ஸ்கூல்). அதுவும் அங்க பக்கத்துலயேதான். அப்பா தினமும் காலையில சைக்கிள்ல கூட்டிட்டு வந்து விட்டுட்டு போவாரு என்னையும் அக்காவையும்.

போன தடவ அண்ணா வீட்டுக்கு போனப்போ அண்ணாவும் அண்ணியும் எதையோ பெருசா சாதிச்ச சந்தோஷத்துல இருந்தாங்க. என்னன்னு  விசாரிச்சப்போதான் தெரிஞ்சது, எங்க ஏரியாவுலயே பிரபலமான மெட்ரிக் ஸ்கூல் ஒண்ணுல ரெண்டு பேரும் இண்டர்வியூ க்ளியர் பண்ணி, பையனுக்கு அந்த ஸ்கூல்ல யூ.கே.ஜிக்கு சீட் வாங்கின விஷயம்.

இந்த தடவை அண்ணா வீட்டுக்கு போனப்போ பையனைக் காணோம். எங்கனு கேட்டா டியூசனாம். யூ.கே.ஜி ஜாய்ன் பண்ணி 2 வாரம்தான் ஆகுது. நான் வந்திருக்கேன்னு போய் அன்னைக்கு ட்யூசனுக்கு பெர்மிஸன் வாங்கி பாதியில கூட்டிட்டு வந்தாங்க. வந்ததும் என்கிட்ட இருந்த சாக்லேட்ட வாங்கிகிட்டு தெரு பசங்களோட விளையாட போயிட்டான். அவங்களாம் பால்வாடி போகுற பசங்கனு நினைக்கிறேன். அதான் டியூசனுக்கு தப்பிச்சிட்டாங்க.

அவன் சாக்லேட் வாங்கின வேகத்துல ஸ்கூல் பேக்கை என்மடிமேலயே வெச்சிட்டு ஓடிட்டான். உள்ளே திறந்தா, சன் பிக்சர்ஸ் படம் நூறாவது நாள்னு போஸ்டர் பார்த்த மாதிரி ஒரு அதிர்ச்சி. யூ.கே.ஜி பையனுக்கு 4 சப்ஜெக்ட். 4 புக். 4 நோட். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்குனு. நல்லா சின்ன வயசுலயே படிப்பு சொல்லி கொடுத்தாதான் பதியும்ங்கிறது உண்மைதான். அதுக்காக இப்படியா?

அட அது கூட பரவாயில்லைங்க, தமிழ் புத்தகத்தை அப்படியே புரட்டினேன். ஏதாவது என்னோட பால்வாடி காலத்து பாட்டு இருந்தா படிக்கும்போதே மனசுக்குள்ள பழைய நினைவுகள் வரும்ங்கிற நப்பாசையில. ஆனா அங்கயும் அதிர்ச்சி - S.A. சந்திர சேகருக்கு சிறந்த டைரக்டர்னு அவார்டு குடுத்த மாதிரி-

ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு டாம் டூம் டய்யா
அஸ்கலக்கடி லாலாசுந்தரி கோலி கொப்பர
டாம் டூம் டீம் டிஸ்ஸூ…

இப்படி ஒரு கருத்தாழமிக்க பாடலை சிறுவர்களுக்கு யூ.கே.ஜியிலேர்ந்தே நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தே ஆகவேணுமில்லையா? யாரு அந்த அஸ்கலக்கடி லாலாசுந்தரி? சரி சுந்தரியைப் பற்றி பிறகு பேசுவோம்.

இந்தியாவில் குறிப்பாய் தமிழ்நாட்டில் கல்வித்தரம் தற்போது எப்படி இருக்கிறது?

யாரேனும் தற்போதைய மாணவர்களின் பாடப்பிரிவுகளை பார்த்திருக்கிறீர்களா? நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பாடங்கள் தற்போது எட்டாம் வகுப்பில், கல்லூரி பாடப்பிரிவுகள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு இறங்கிவிட்டன. அது என்னைக்கேட்டால் ஒரு வகையில் நல்ல விஷயம்தான், ஆனால் மாணவர்களின் கற்றறியும் திறன்???

முன்னொரு காலத்தில் நாங்கள் டிரெயினிங்கில் இருந்த போது Weekend teaching activityகாக ஒரு சிறுவர்கள் இல்லம் போவோம். அங்குள்ள குழந்தைகள் அருகிலிருக்கும் அரசுப் பள்ளிகளில் பயில்வோர். அங்கு நாங்கள் ஒன்றும் பெரிதாக கற்றுக் கொடுத்துவிடவில்லை. நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு A,B,C,D மற்றும் பெருக்கல் வாய்பாடுகள்தான்.

காரணம் மிகச்சாதாரணமான ஒன்று. நான்காம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசின் அதிசிறந்த திட்டத்தின் வெளிப்பாடு இவை. இப்பொழுது எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்யப்போவது பற்றியும் பேசிக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.

இவையெல்லாம் எந்த வகையில் கல்வித்தரத்தை உயர்த்துமென்பது அந்த திட்டம் தீட்டியவருக்கு மட்டுமே  வெளிச்சம். ஒரு காலத்தில் சத்துணவு தருகிறோம் என்று அழைத்தனர். பிறகு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்த பெண் குழந்தைகளுக்கு திருமணத்தின் போது ரொக்கப்பணம் தருகிறோம் என அழைத்தனர். இப்போது படிக்கவே வேண்டாம் தினமும் பள்ளிக்கு வந்தாலே போதும் என, ஆடித்தள்ளுபடி விளம்பரங்களில் துணிக்கடைகளை மிஞ்சி நிற்கிறது கல்வித் தரம்.

மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தால் மட்டுமே நல்ல படிப்பு கிடைக்குமென்பது ஆதிகாலம் தொட்டு வரும் வழக்கு. அதை இன்னும் நிரூபிக்கும் வகையில், பிறந்த குழந்தைக்கே கடிவாளம் போட்டு ஆங்கில வழிக் கல்வி முறைகள் தங்களை மேம்படுத்திக் காட்டிக் கொள்ள, அரசுப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் வந்து பெருக்கல் வாய்பாடு கற்றுக் கொண்டிருக்கிறார்கள் முருகேசனும், முனுசாமியும்.

தரமான உணவு, உடை, உறைவிடம் மட்டுமே பணக்காரர்களுக்கு என்றது போய் இப்போது தரமான கல்வி வேண்டுமென்றாலும் உன் பாட்டன் சொத்து பெருமளவில் வேண்டுமென்ற நிலை உருவாகி வருகிறது… கல்வியையும் வியாபாரப் பொருளாக்கி வணிகம் செய்யும் பணப்பெருச்சாலிகள் குடைந்து கொண்டிருக்கும் வரை கல்விக் குதிரின் ஓட்டை பெரிதாகிக் கொண்டேதான் இருக்கும்…

1 comment:

 1. உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
  ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
  ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
  நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
  ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
  :)

  ReplyDelete