Monday, 20 September 2010

பாஸ் என்கிற பாஸ்கரன்…

ஆர்யா - பாஸ்கரன்,                                           நயன்தாரா - சந்திரிகா
சந்தானம் - நல்லதம்பி,                                     பஞ்சு சுப்பு - சரவணன்
சித்ரா லக்ஷ்மணன் - சண்முக சுந்தரம்,   ராஜேந்திரன் - வேல்பாண்டி
இசை - யுவன்,                                                      இயக்கம் - M.ராஜேஷ்
வெளியீடு - ரெட் ஜெய்ண்ட் மூவீஸ்

படத்துக்கு டைட்டில் போடும் போதே 10.10னு மட்டுமே மணி காட்டுற கடிகாரத்துல நொடி முள் மட்டும் சுத்தி சுத்தி எழுத்துக்களை அழிக்கிற மாதிரி காமிச்சு டைரக்டர் ஏதோ சொல்ல வர்றாரு. அவரு என்ன சொல்ல வர்றார்னா?
ஒண்ணும் சொல்ல வரல. அந்த கடிகாரம் ரிப்பேராகிப் போய் ஓடாம நிக்குது. அவ்ளோதான்.

சந்தானம் ஹீரோவா நடிச்சிருக்கிற பாஸ் என்கிற பாஸ்கரன்ல, சாரி சாரி - ஆர்யா பாஸ்@பாஸ்கரனா நடிச்சிருக்கிற இந்த படத்துல சிவா மனசுல சக்தி எடுத்த அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணியிருக்காரு ராஜேஷ்.  கதைங்கிற வார்த்தைக்கு கூட ரெண்டு எழுத்து இருக்கு. ஆனா இந்த படத்துல???

ஜாலியா ஊர் சுத்திகிட்டு அரியர்ஸ பல வருஷமா க்ளியர் பண்ண டிரை பண்ற பாஸ்கரை - சந்திரிகா கரெக்ட் பண்ணனும்னு பாக்குறாங்க. ஆனா வேலையில்லாதவருக்கு அப்பா பொண்ணு கொடுக்க மாட்டாரேனு அவர மொதல்ல லைஃப்ல செட்டில் பண்ணிட்டு அப்புறமா கரெக்ட் பண்றாங்க. பாஸ் கூட அவரோட ஃப்ரெண்ட் நல்லதம்பி. ‘நண்பேன்டா’ங்கிற ஒரு வார்த்தைக்காக அவரு படுற இம்சை இருக்கே. அய்யோய்யோய்யோ! இதுதான் பாஸ் என்கிற பாஸ்கரன்.

சந்தானத்தை மட்டுமே நம்பி எவ்ளோ நாளைக்கு காலம் தள்ளுவீங்கன்னு தெரியல. படம் முழுக்க சந்தானம் சந்தானம் சந்தானம்தான். சொல்லப்போனா ஹீரோ இன்ட்ரொடக்சனுக்கு முன்னாடியே சந்தானம் இன்ட்ரோ. அதுவும் அந்த வழக்கமான அசட்டுச் சிரிப்போட. எவனோ ஓட்டின செகண்ட் ஹேண்ட் வண்டிக்கு அவரை வெச்சு புதுசா ரெஜிஸ்டர் பண்ற காமெடி, இன்னொரு ‘கிரி’ அக்கா ரகசியம்.

படத்தோட பெயரே ஆர்யாவோட கதாபாத்திர பெயர்தான்கிறதால அவரும் காமெடி செஞ்சே ஆக வேண்டிய கட்டாயம். அவரும் அவரால முடிஞ்சதை டிரை பண்ணியிருக்காரு. சந்தானமே முழுசா டாமினேட் பண்ணிடறதால ஆர்யாவுக்கு கெத்து கொஞ்சம் கம்மியா இருக்கு. சி.ம.ச ல ஜீவாவுக்கு இருந்த அளவுக்கு அழுத்தமில்ல. படமும் அதே மாதிரிதான். சி.ம.ச -க்கு 6 மார்க் போடலாம்னா இதுக்கு 4 மார்க்.

நயன்தாரா - கேக்கவே வேணாம். அம்மணிக்கு வயசாயிடுச்சுன்னு எல்லாரும் இந்த படத்தை பார்த்து கன்ஃபார்ம் பண்ணிடறாங்க. எப்பவும் போல ஹீரோயினுக்கு இந்த படத்துலயும் கேரக்டர் இல்லைங்கிறது கூட எனக்கு கோபம் இல்ல, ஹீரோவுக்கு வேலையே இல்லைனாலும் அவரை மாய்ஞ்சு மாய்ஞ்சு லவ் பண்றதுகூட எனக்கு கோபமில்லை, ஆனா அந்த லிப்-டு-லிப் சீன் வரும்போது கரெக்டா டைமிங் பார்த்து “அய்யய்யோ பிரபுதேவா பாவம்”னு எதுக்குய்யா தியேட்டர்ல ரன்னிங் கமெண்ட் கொடுக்குறீங்க? நாஞ்சென்ஸ். :evil:

சந்தானம் பத்தி இங்க சொல்லணும்னா படத்துல அவரு வர்ற ஒவ்வொரு சீனையும் சொல்லியே ஆகணும். அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. மங்கூஸ் மண்டை மாமா சித்ரா லக்ஷ்மண், அண்ணன் சரவணனா சுப்பு, அரியர்ஸ் சுவாமிநாதன்னு எல்லாருமே ஒரு சில காட்சிகள்ல வந்தாலும் சிரிக்க வெச்சிருக்காங்க. நான் கடவுள்ல அப்படி கொடூரனா நடிச்ச ராஜேந்திரன்?!?!? உங்கள மாதிரி ஆளுங்களை பாலா மட்டும்தான் பயன்படுத்திக்குவாரு. ஆர்யாவோட சிபாரிசுல இங்க சேர்ந்தீங்களா? :roll:

 ஷகீலா - ராஜேஷ் சார் எனக்கோரு உண்மை தெரிஞ்சாகணும். சி.ம.ச-லயும் இவங்க வந்தாங்க. இந்த படத்துலயும் வந்திருக்காங்க. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா ராஜேஷ் சார்? அதுலயும் அவங்க அந்த டுட்டோரியல்ல அந்த ஃபார்முலாவைதான் நடத்தணும்னு எதுக்கு செலக்ட் பண்ணினீங்க?

இசை - யுவனின் வழக்கமான சரக்குல கிக் கொஞ்சம் கம்மியா இருக்கு. யார் இந்த பெண்தான் நல்லா இருக்கு. பாஸூ பாஸூ பாஸு, தத்தி தாவும் - ஓ.கே. அய்லே அய்லேவும், மாமா மாமா பொண்ண குடு-வும் படத்துக்கு தேவையே இல்ல. எரிச்சலூட்டுது ரெண்டும்.

சி.ம.ச-ல பல்பு வாங்குற மாப்பிள்ளையா அடுத்த படமான இந்த ஹீரோ ஆர்யா வந்த மாதிரி, இதுல பல்பு வாங்க அடுத்த படத்தோட ஹீரோ உதயநிதி வருவாருன்னு எதிர் பார்த்தேன். ஆனா ஜீவாவே ‘சிவா’வா வந்து கடனை தீர்த்துட்டாரு.

படத்துல நோட் பண்ண வேண்டிய ஒரு பொன்மொழி “பொண்ணுங்களை பொறுத்த வரைக்கும் பசங்க பல வகை. அதிகமா பேசினா போர் பார்ட்டி, பேசவேயில்லனா சாம்பார், சிரிச்சு சிரிச்சு பேசினா ஜொள்ளு, சிரிக்கலைனா பிதாமகன், இங்லீஷ்ல பேசினா பீட்டரு, தமிழ்ல பேசினா லோக்கலு. ஆனா பசங்களுக்கு - பொண்ணுங்க ரெண்டே வகை. ஒண்ணு சூப்பர் ஃபிகரு, இன்னொன்னு சப்ப ஃபிகரு” - நோட் பண்ணிகிட்டீங்களா?


பாஸ் என்கிற பாஸ்கரன் - நல்லதம்பி என்கிற சந்தானம்…

Monday, 19 July 2010

சும்மா இரண்டு கவிதைகள்...

பால்(paul)


_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-

இன்றைக்கு எந்த சட்டை போடுவது?

கருப்பா? நீலமா?


இன்னைக்கு அவகிட்ட சொன்னா?

ஏத்துக்குவாளா? வேணாம்னு சொல்வாளா?


இன்னைக்கு எந்த பதிவு போடலாம்?

திரைப்பட விமர்சனமா? கவிதைகளா?


இந்த முறை ப்ரொமோசன்?

கிடைக்குமா? கிடைக்காதா?


கூப்பிடுங்கள் பால்(paul) ஆக்டோபஸியை...



பெட்ரோல்


_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-_-

அவளுக்கு நீதான் உயிர்

நீயின்றேல் அவளில்லை

அவளுக்காகவே உனை வாங்க வேண்டும்



காந்தித்தாள் ஒன்றுக்கு முன்னொரு காலத்தில்

2.26 தந்தனர் உனது உரிமையாளார்கள்

பிறகு 2.12 வானது 2.06 ஆனது



சமீபகாலமாக கூட 1.92 வாக வாரித்தந்தனர்

தற்போது 1.79 க்கு மேல் ஒரு மில்லி கிடையாதாம்



விலைவாசியாம், பட்ஜெட்டாம் - ஏதோதோ சொல்லி

கடைசியில் ஒரு காந்தித் தாளுக்கு 1 மட்டுமே

தருவார்கள் போலும்...

Tuesday, 13 July 2010

அஸ்கலக்கடி லாலாசுந்தரி…

“தம்பி இங்க வாப்பா. உன்னோட வலது கையால தலைய சுத்தி இடது காதை தொடு பாக்கலாம். ம்ம் கை முட்டுதா, அப்போ உன்ன சேர்த்துக்கலாம்” இப்படி சொல்லிட்டு பல்பத்தை(சிலேட் பென்சில்) பால்ல தொட்டு நாக்குல ‘அ’ போட்டாரு முருகையன் ஹெட்மாஸ்டர். இப்படிதான் நான் ஒண்ணாவது சேரும் போது ஊ.ஒ.து (ஊராட்சி ஒன்றிய துவக்கப்) பள்ளியில சேர்த்தாங்க.

அதுக்கு முன்னாடி ஒரு வருஷம் பால்வாடி(அரை க்ளாஸ்-பேபி ஸ்கூல்). அதுவும் அங்க பக்கத்துலயேதான். அப்பா தினமும் காலையில சைக்கிள்ல கூட்டிட்டு வந்து விட்டுட்டு போவாரு என்னையும் அக்காவையும்.

போன தடவ அண்ணா வீட்டுக்கு போனப்போ அண்ணாவும் அண்ணியும் எதையோ பெருசா சாதிச்ச சந்தோஷத்துல இருந்தாங்க. என்னன்னு  விசாரிச்சப்போதான் தெரிஞ்சது, எங்க ஏரியாவுலயே பிரபலமான மெட்ரிக் ஸ்கூல் ஒண்ணுல ரெண்டு பேரும் இண்டர்வியூ க்ளியர் பண்ணி, பையனுக்கு அந்த ஸ்கூல்ல யூ.கே.ஜிக்கு சீட் வாங்கின விஷயம்.

இந்த தடவை அண்ணா வீட்டுக்கு போனப்போ பையனைக் காணோம். எங்கனு கேட்டா டியூசனாம். யூ.கே.ஜி ஜாய்ன் பண்ணி 2 வாரம்தான் ஆகுது. நான் வந்திருக்கேன்னு போய் அன்னைக்கு ட்யூசனுக்கு பெர்மிஸன் வாங்கி பாதியில கூட்டிட்டு வந்தாங்க. வந்ததும் என்கிட்ட இருந்த சாக்லேட்ட வாங்கிகிட்டு தெரு பசங்களோட விளையாட போயிட்டான். அவங்களாம் பால்வாடி போகுற பசங்கனு நினைக்கிறேன். அதான் டியூசனுக்கு தப்பிச்சிட்டாங்க.

அவன் சாக்லேட் வாங்கின வேகத்துல ஸ்கூல் பேக்கை என்மடிமேலயே வெச்சிட்டு ஓடிட்டான். உள்ளே திறந்தா, சன் பிக்சர்ஸ் படம் நூறாவது நாள்னு போஸ்டர் பார்த்த மாதிரி ஒரு அதிர்ச்சி. யூ.கே.ஜி பையனுக்கு 4 சப்ஜெக்ட். 4 புக். 4 நோட். தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணக்குனு. நல்லா சின்ன வயசுலயே படிப்பு சொல்லி கொடுத்தாதான் பதியும்ங்கிறது உண்மைதான். அதுக்காக இப்படியா?

அட அது கூட பரவாயில்லைங்க, தமிழ் புத்தகத்தை அப்படியே புரட்டினேன். ஏதாவது என்னோட பால்வாடி காலத்து பாட்டு இருந்தா படிக்கும்போதே மனசுக்குள்ள பழைய நினைவுகள் வரும்ங்கிற நப்பாசையில. ஆனா அங்கயும் அதிர்ச்சி - S.A. சந்திர சேகருக்கு சிறந்த டைரக்டர்னு அவார்டு குடுத்த மாதிரி-

ஆக்கு பாக்கு வெத்தலை பாக்கு டாம் டூம் டய்யா
அஸ்கலக்கடி லாலாசுந்தரி கோலி கொப்பர
டாம் டூம் டீம் டிஸ்ஸூ…

இப்படி ஒரு கருத்தாழமிக்க பாடலை சிறுவர்களுக்கு யூ.கே.ஜியிலேர்ந்தே நல்லா மனசுல பதியுற மாதிரி சொல்லிக் கொடுத்தே ஆகவேணுமில்லையா? யாரு அந்த அஸ்கலக்கடி லாலாசுந்தரி? சரி சுந்தரியைப் பற்றி பிறகு பேசுவோம்.

இந்தியாவில் குறிப்பாய் தமிழ்நாட்டில் கல்வித்தரம் தற்போது எப்படி இருக்கிறது?

யாரேனும் தற்போதைய மாணவர்களின் பாடப்பிரிவுகளை பார்த்திருக்கிறீர்களா? நாம் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற பாடங்கள் தற்போது எட்டாம் வகுப்பில், கல்லூரி பாடப்பிரிவுகள் மேல்நிலைப்பள்ளிகளுக்கு இறங்கிவிட்டன. அது என்னைக்கேட்டால் ஒரு வகையில் நல்ல விஷயம்தான், ஆனால் மாணவர்களின் கற்றறியும் திறன்???

முன்னொரு காலத்தில் நாங்கள் டிரெயினிங்கில் இருந்த போது Weekend teaching activityகாக ஒரு சிறுவர்கள் இல்லம் போவோம். அங்குள்ள குழந்தைகள் அருகிலிருக்கும் அரசுப் பள்ளிகளில் பயில்வோர். அங்கு நாங்கள் ஒன்றும் பெரிதாக கற்றுக் கொடுத்துவிடவில்லை. நான்காம் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு A,B,C,D மற்றும் பெருக்கல் வாய்பாடுகள்தான்.

காரணம் மிகச்சாதாரணமான ஒன்று. நான்காம் வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் கிடையாது, அனைவருக்கும் தேர்ச்சி என்ற அரசின் அதிசிறந்த திட்டத்தின் வெளிப்பாடு இவை. இப்பொழுது எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி மற்றும் பத்தாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு முறையை ரத்து செய்யப்போவது பற்றியும் பேசிக்கொண்டிருப்பதாக அறிந்தேன்.

இவையெல்லாம் எந்த வகையில் கல்வித்தரத்தை உயர்த்துமென்பது அந்த திட்டம் தீட்டியவருக்கு மட்டுமே  வெளிச்சம். ஒரு காலத்தில் சத்துணவு தருகிறோம் என்று அழைத்தனர். பிறகு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படித்த பெண் குழந்தைகளுக்கு திருமணத்தின் போது ரொக்கப்பணம் தருகிறோம் என அழைத்தனர். இப்போது படிக்கவே வேண்டாம் தினமும் பள்ளிக்கு வந்தாலே போதும் என, ஆடித்தள்ளுபடி விளம்பரங்களில் துணிக்கடைகளை மிஞ்சி நிற்கிறது கல்வித் தரம்.

மெட்ரிக்குலேசன் பள்ளியில் படித்தால் மட்டுமே நல்ல படிப்பு கிடைக்குமென்பது ஆதிகாலம் தொட்டு வரும் வழக்கு. அதை இன்னும் நிரூபிக்கும் வகையில், பிறந்த குழந்தைக்கே கடிவாளம் போட்டு ஆங்கில வழிக் கல்வி முறைகள் தங்களை மேம்படுத்திக் காட்டிக் கொள்ள, அரசுப்பள்ளிகளில் எட்டாம் வகுப்பில் வந்து பெருக்கல் வாய்பாடு கற்றுக் கொண்டிருக்கிறார்கள் முருகேசனும், முனுசாமியும்.

தரமான உணவு, உடை, உறைவிடம் மட்டுமே பணக்காரர்களுக்கு என்றது போய் இப்போது தரமான கல்வி வேண்டுமென்றாலும் உன் பாட்டன் சொத்து பெருமளவில் வேண்டுமென்ற நிலை உருவாகி வருகிறது… கல்வியையும் வியாபாரப் பொருளாக்கி வணிகம் செய்யும் பணப்பெருச்சாலிகள் குடைந்து கொண்டிருக்கும் வரை கல்விக் குதிரின் ஓட்டை பெரிதாகிக் கொண்டேதான் இருக்கும்…

Saturday, 19 June 2010

கேட்ட பாடல்…

“ஹாய் & ஹலோ. வெல்கம் டு வாழ்த்தலாம் வாங்க. நம்ம கூட பேச போற அடுத்த Caller” இது எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா? ஆமாங்க தொ(ல்)லைபேசில பேசி பேசி பாட்டு போடுவாங்களே, அதைப் பத்தின பதிவுதான் இது.


முன்னாடி ஒரு காலத்துல தூர்தர்ஷன்னு ஒரே சேனல்தான் இருக்கும். ரிமோட்களெல்லாம் நிம்மதியா இருந்த காலம் அது. அப்போலாம் எங்க ஊர்லயே மொத்தம் 2 வீட்டுலதான் டிவி இருக்கும். Sutter வெச்ச Solidair டிவி நியாபகம் இருக்கா அதுதான். அப்புறம் ஊருக்கே பொதுவா பஞ்சாயத்து டிவி இருக்கும். ஊர்லயே 2 வீட்லனு சொன்னேன்ல, அதுல ஒண்ணு எங்க அத்தையாங்க வீடு. எல்லாரும் உக்காந்து பார்க்குற மாதிரி ஒரு இடத்துல டிவி இருக்கும். நிறைய பேர் பார்ப்பாங்க. எங்க அத்தை வீடுங்கிறதால நான் chairல உக்காரலாம், Volume குறைக்கலாம் கூட்டலாம். என்னோட மத்த நண்பர்களெல்லாம் பொறாமையா பார்ப்பாங்க. அந்த வயசுல அதுல ஒரு தனி பந்தா.


நானும் எங்க அக்காவும் ஸ்கூல் ஹோம்வொர்க்லாம் 7.30P.M மணிக்குள்ள எழுதிட்டு, 8.00P.M க்குள்ள சாப்பிட்டுட்டு அத்தை வீட்டுக்கு ஓடிருவோம். ம்ம்ம் சொல்ல மறந்துட்டேன், எங்க அத்தைக்கு 4 பொண்ணுங்க . ரொம்ப பொறாமைப்படாதீங்க எல்லாரும் என்னை விட பெரியவங்க 
. 7.55 க்கெல்லாம் அத்தை வீட்ல ஆஜர். அய்யாதான் டிவிய ஆன் பண்ணுவேன். 7.59க்கு செய்திகளுக்கு Count down ஸ்டார்ட் ஆனதுமே நானும் எங்க அக்காவும் ஒரு பந்தயம் கட்டுவோம் ‘இன்னைக்கு செய்தி வாசிக்கப்போற ரெண்டு பேருமே லேடீஸ்-னு நானும், இல்ல ரெண்டுமே Gentsனு எங்க அக்காவும். அப்படி ஒரு ஆண், ஒரு பெண்-னு பந்தயம் வெச்சா யார் மொதல்ல வணக்கம் சொல்வாங்கன்னும் சேர்த்து சொல்லணும்.

பந்தயத்துல யார் ஜெயிக்கிறாங்களோ அவங்களுக்கு இன்னொருத்தர் அடுத்த நாள் ஸ்கூல் போகும்போது ஜவ்வு மிட்டாய் வாங்கித்தரணும். அதுக்குதான் பந்தயமே. நிறைய தடவ நான்தான் ஜவ்வுமிட்டாய் வாங்குவேன். அக்கா வாங்குனாலும் பாதி தந்திருவா. (தரலைணா நானே புடுங்கிருவேன்னு தெரியும் அக்காவுக்கு). இது அத்தை வீட்ல.



வெள்ளிக்கிழமை ஆச்சுன்னா பஞ்சாயத்து டிவி பார்க்க போயிடுவேன். ஏன்னா 7.30க்கு ஒளியும் ஒலியும் போடுவாங்க. அதுல இன்னைக்கு ரஜினி பாட்டு போடுவாங்க, எம்.ஜி.ஆர் பாட்டு போடுவாங்கன்னு நண்பர்கள் கூட பந்தயம். இந்த பந்தயத்துல ஜெயிச்சா ஜவ்வு மிட்டாயில்ல, அடுத்த சனி ஞாயிறுல வாடகை சைக்கிள் எடுத்தா அதுல 2 ரவுண்டு ஓட்டத் தரணும். அதெல்லாம் ஒரு காலம். ப்ப்ச்ச்…


இப்போ எதுக்கு இந்த மொக்கைய போட்டேன்னா அப்போவெல்லாம் ஒளியும் ஒலியும்தான் பாட்டு போடுற ஒரே நிகழ்ச்சி. பழைய பாடல்களைக்கூட ஆட்டம் போட்டு ரசிச்சு பார்ப்போம். அப்புறம்தான் டிஷ் ஏண்டனா, கேபிள் டிவினு ஆக்கிரமிப்புகள் அதிகமாச்சு. கேபிள் டிவியெலாம் வந்த அப்புறம் எங்க வீட்லயே டிவி வாங்கிட்டாங்க. அப்போ எனக்கு பிடிச்ச நிகழ்ச்சி ‘பெப்ஸி உங்கள் சாய்ஸ்’. போன் பண்ணி உமா ஆண்ட்டிகிட்ட நமக்கு பிடிச்ச பாட்டு கேட்டா அவங்க அந்த பாட்டு போடுவாங்க.


அந்த நிகழ்ச்சி எங்க அம்மாவுக்கும் ரொம்ப பிடிக்கும். எல்லா பெண்களுக்கும் ரொம்ப பிடிக்கும். ஏன்னா பெப்ஸி உமா வித விதமா அழகழகா புடவை கட்டிகிட்டு வருவாங்க. ஆனா அது எப்பவோ எடுத்துட்டு கொஞ்ச நாள் கழிச்சுதான் டெலிகாஸ்ட் பண்ணுவாங்க.


அப்புறம்தான் லைவ் டெலிகாஸ்ட் கான்செப்ட் வந்திச்சு. அவ்ளோ நேரம் கஷ்டப்பட்டு கால் பண்ணிட்டு நாம பேசுறத நாமளே கேக்க முடியாது. அதுவாவது பரவாயில்ல நாம கேக்குற பாட்டாவது போடுறாங்களானா அதுவும் கிடையாது.

நான் காலேஜ் ஹாஸ்டல்ல படிக்கும் போது, (நம்ம எப்போ படிச்சோம்) இருக்கும் போது lunch முடிச்சிட்டு மறுபடி க்ளாஸ் போறதுக்கு 10- 15 நிமிசம் டைம் இருக்கும். அந்த கேப்ல 2 பாட்டு கேக்கலாம்னு எஃப்.எம் போடுவோம். ‘கோடைப்பண்பலையில் இது கொடைக்கானல்’. 3 நிமிசம் விளம்பரம் ஓடும், அப்புறம் இந்த பாடலை விரும்பி கேட்ட நேயர்கள்னு 5 நிமிசத்துக்கு ஒரு பெரிய லிஸ்ட் படிப்பாங்க. அப்புறம் பாட்டு போடும்போது கிளம்பி க்ளாஸ் போயிடுவோம்.



லைவ் டெலிகாஸ்ட் வந்தாலும் வந்துச்சு, கூடவே ஸ்பான்சர்ஸ் - விளம்பரங்களும் வந்திருச்சு. முன்னாடியெல்லாம் நிகழ்ச்சிக்கு நடுவுலதான் விளம்பரம் போடுவாங்க. இப்போ விளம்பரங்களுக்கு நடுவுலதான் நிகழ்ச்சியே. அதுவும் கால் பண்ணினா எவ்ளோ நேரம் வெயிட்டிங்க்ல இருக்கணும் தெரியுமா. ஆனா பேசுறது என்னமோ 2 நிமிசம்தான்.  அதுவும் நாம கேக்குற பாட்டு கூட போட மாட்டாங்க . இப்போ இருக்கிற நிகழ்ச்சியெல்லாம் பெண்களுக்கு பிடிக்கிறதில்ல. ஏன் தெரியுமா? பெப்ஸி உமா அழகழகா புடவை கட்டிட்டு வருவாங்க பிடிச்சது, ஆனா இப்போ வர்றவங்கதான் டிரஸ்ஸே போடுறதில்லயே? அட ஒழுங்காவே டிரஸ் போடறதில்லைனு சொல்ல வந்தேம்ப்பா. எப்பவும் தப்பு தப்பாவே நினைக்கிறது.


அதுவும் காலையில 8 -10 வாழ்த்துக்கள் சொல்ற நிகழ்ச்சியிருக்கே. ரொம்ப மோசம், ‘அடுத்த காலர் பார்க்கலாம்னு’ சொல்வாங்க, பெயர் கேட்டுட்டு யாருக்கு வாழ்த்துக்கள்னு கேப்பாங்க. அவங்க சொல்லிகிட்டு இருக்கும் போதே கால் கட் பண்ணிட்டு, ‘கட் ஆய்டுச்சுனு; ஈஈனு பல்ல காட்டிட்டு பாட்டு போட்ருவாங்க. பாட்டும் முழுசா போட மாட்டாங்க, 2 லைன் போட்டுட்டு விளம்பரம் போட்ருவாங்க. நாஞ்சென்ஸ்… 


இப்படியே போச்சுன்னா கால் பண்றவங்க பெயர் மட்டும் கேட்டுகிட்டு ‘அவர் வாழ்த்தணும்னு நினைச்சவங்களுக்காக இந்த பாட்டு, இந்த பாட்டு போடணும்னு நினைச்சதுக்காக விளம்பர இடைவேளைனு’ கிளம்பிடுவாங்க. அதுவும் இல்லைனா Loud speaker போன்ல ரிங் அடிக்கிற சத்தம் மட்டும் கேட்க வெச்சிட்டு, ‘இதோ நமக்கு யாரோ ஒருத்தர் கால் பண்ண டிரை பண்றாரு, அவர் கால் பண்ணனும்னு நினைச்சதுக்காக பாடல் பார்ப்போம், பாடலுக்காக விளம்பரம் பார்ப்போம் கிளம்பினாலும் ஆச்சர்யப்படுறதுக்கில்ல  


இப்போவும் பந்தயம் கட்டுவோம் ரூம்ல. ‘இன்னைக்கு VJ நல்ல ஃபிகர் வந்திருக்கும்னு. எங்க நடக்குது . தினமும் பந்தயத்துல தோல்விதான். மகாலக்ஷ்மி செல்லம் போனதுக்கப்புறம், திவ்யா அப்புறம் இப்போ நிஷா. ஏதோ இவங்களை நினைச்சு மனச தேத்திகிட்டு இருக்கேன். வேற என்ன பண்றது? 

மழையும் கொடூர யோசனைகளும்…

மழை வந்துச்சுன்னா மழையிலயிருந்து எப்படி தப்பிக்கிறதுன்னு ஏதோ என்னோட குட்டி களிமண்ணுல ச்சீ… மூளையில தோணின சில யோசனைகள்…


கொடூர யோசனை#1:


காலையில எந்திரிக்கும் போது மழை வந்துகிட்டு இருக்கு. ஆஃபீஸ் போலாமா வேணாமானு ஒரு பெரிய சந்தேகம். அது தினமும்தான் இருக்கும். இன்னைக்கு மழை வேற வருது. உடனே நீங்க உங்க TL, மேனேஜர், Team mates எல்லார்க்கும் கால் பண்ணி நான் இன்னைக்கு கண்டிப்பா ஆஃபீஸ் வருவேன்னு சொல்லிடுங்க. முடிஞ்சா வீட்டுக்கு வெளிய வந்து நின்னு சத்தம் போட்டு கூட சொல்லுங்க மழைக்கு கேக்குற மாதிரி. சொல்லிட்டு கபால்னு போய் இழுத்து போர்த்தி தூங்கிடுங்க.
நீங்க வெளிய வருவீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்து மழை ஏமாந்து போகும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#2:


ஐடியா 1னோட உல்ட்டா. கால் பண்ணி ‘இன்னைக்கு நான் ஆஃபீஸ் வர மாட்டேன்’னு சொல்லிட்டு திடீர்னு கிளம்பி ஆஃபீஸ் போய்டுங்க.
நீங்க இன்னைக்கு ஆஃபீஸ்க்கு லீவ்னு நினைச்சுகிட்டு இருந்த மழை ஏமாந்து போகும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#3:


மழை வந்ததும் போய் உங்க வீட்டு கதவு கிட்ட ஒளிஞ்சுக்கோங்க. அப்புறமா திடீர்னு வெளிய வந்து மழைய தொட்டு ‘ஐஸ், ஐஸ்’னு கத்துங்க. அப்போ மழையே மறுபடி ‘OUT’ ஆயிடும். அப்புறம் மறுபடி அது 1..2..3 count பண்ண போயிடும்ல?
************************************************************************************



கொடூர யோசனை#4:


மழையின் முக்கியமான நொக்கமே நம்மளை நனைக்கிறதுதான். அதனால நீங்க அஃபீஸ்க்கு கிளம்பி, நல்ல neatஆ அயர்ன் பண்ணி டிரஸ் போட்டுகிட்டு நேரா போய் ஷவர்ல நின்னோ இல்லையின்னா ஒரு பக்கெட் தண்ணிய எடுத்து ஊத்தியோ உங்களை ஃபுல்லா நனைச்சுக்கோங்க. துளி கூட நனையாம இருக்கக்கூடாது. ஓ.கே வா? அப்படியே கிளம்பினீங்கன்னா மொதல்லயே நனைஞ்ச உங்கள நனைக்க முடியாம மழை ஏமாந்து போகும்ல பாவம்? ஆனா நீங்க முழுசா நனையாம வெளிய வந்தீங்கன்னா மழைக்கு கொண்டாட்டம்தான்.
************************************************************************************



கடைசியா கொடூர யோசனை#5:


‘ஒழுங்கா போயிடு. இல்லையின்னா இந்த போஸ்ட்ட printout எடுத்து (மழையில) நனைச்சு உன்னை படிக்க வெச்சிருவேன்’னு மிரட்டுங்க. அப்புறம் பாருங்க……   
 இதைப்படிச்சதுமே உங்களுக்கு எனக்கு ஏதாவது குடுக்கணும் போல தோணும். உங்க அன்புக்கு நன்றி.மக்களே எதுவாயிருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். தீர்த்துட்டா அப்புறம் பேச முடியாது பாருங்க.  ஹோக்கே???


இன்னும் இது மாதிரி பல பல யோசனைகள் இருக்கு. நீங்க ஓ.கே சொன்னா அடுத்தடுத்த பதிவுகள்ல வழங்கிடறேன். என்ன சொல்றீங்க? டீலா? நோ டீலா???

என் தேவதைக்கு…(cont)



ஊரெல்லாம் அடைமழை - அதன் விளைவால்
என் மனமெல்லாம் உன் நினைவு மழை
மழையில் நனைந்தபடி நடப்பது உனக்கு மிகவும் பிடிக்கும்
எனக்கும்தான் - உடன் கைகோர்த்து நடப்பது நீயென்றால்…

*************************************************************


இதோ இப்பொழுதும் மழையில் நனைந்தபடி நடக்கிறேன்
ஆனால்,”அவளின்றி நீ மட்டும் ஏன் தனியே?”
என் ஒவ்வொரு மழைத்துளியும் என்னைத்
தொடவில்லை - சுடுகிறது…
*************************************************************



எப்போதும் நடக்கையில் பொது இடமென்று
கை மட்டும் கோர்த்து நடப்பாய்
மழையில் நடப்பதென்றால் மட்டும் தோள் சாய்வாய்
அதற்காகத்தான் சரியாக 5 அடி 5  அங்குலமே வளர்ந்தாயோ?
உன் சிரம் என் தோள் சாயும் உயரத்திற்கு?

*************************************************************


“மழை வரும் போல இருக்கு. குடை எடுத்திட்டு வரேன்”னு
சொன்னேல - எங்கடா? என்றேன் நான்.
“இதோ இங்கே” என சிரித்தபடி போர்த்தினாய் துப்பட்டாவை
தூறல் ஆரம்பித்ததும் நடந்தோம் சிறிது தூரம்
“குளிருதுப்பா” என நெருங்கினாய் என்னருகே
அங்கே நம்மிடையே புகுந்து வெளியேற முயன்ற
காற்றும் தோற்றுத்தான் போனது! ‘குளிருக்கு நன்றி’



உறவுகளுக்கும் ரத்த பாசங்களுக்கும் தர விருப்பமில்லை
உனக்கு மட்டும், உனக்காக மட்டுமே தருவதே என் விருப்பம்
என்னிடமிருந்தால் பாசத்தில் தந்துவிடுவேன் - அதனால்

நீயே பத்திரமாக வைத்துக்கொள் எனது இதயத்தை
நான் வேண்டுமானால் மற்றவர்களிடம் பொய் சொல்லிக்கொள்கிறேன்
‘அதை துலைத்துவிட்டேன். துலைத்த இடம் மறந்துவிட்டேன்’  என
#############################################################

மறக்க முடியா நிகழ்வு எதுவென கேட்பவர்களுக்கு
எத்துணைதான் சொல்வது? உன்னுடனிருந்த ஒவ்வொன்று நொடியையும்?

வேண்டுமானால் கடைசியாக நடந்தது என இதைச் சொல்லிவிடவா?

சென்ற வாரம் உலகம் அழிவதைப் பற்றி சொல்லும் திரைப்படத்திற்கு
இரவுக்காட்சிக்கு ‘தேவி’ திரையரங்கம் போய் வந்ததை?

திரைப்படம் முடிந்து நள்ளிரவு 1 மணிக்கு
யாருமற்ற மவுண்ட் ரோட்டில் நீயும் நானும் மட்டும் பயணிக்க
இரவு பெய்துவிட்டு போன மழை குளிர் காற்றை மிச்சம் விட்டுப் போயிருக்க

வேகமாகப் போனால் உன்னுடனான பயணமும்
வேகமாய் முடிந்திடுமே என மிதவேகத்தில் பயணம் தொடர

எதுவும் வேண்டாமென சிகப்பு விளக்குமின்றி,
எது வேண்டுமானாலும் செய்யென பச்சை விளக்குமின்றி,
அழகாய் காதல் செய்யென மஞ்சள் விளக்குமட்டும்
அணைந்து அணைந்து எரிந்தபடி சிக்னல்களும் சிம்பாலிஸம் காட்ட

குளிரை விரட்டுவதாய் (குளிருக்கு நன்றி) மிக லாவகமாய்
நீ இறுக்கி அணைத்த போது உன் ஸ்பரிசமும் கதகதப்பும்
போதும் எனக்கு என் மீதான் உனது காதலை புரிந்து கொள்ள…

என் தேவதைக்கு…

ஆனாலும் நீ கொடுமைக்காரி…

சாப்பிட சரியாக 3 நிமிடமே தருகிறாய்,
அடுத்த நொடியில் அழைப்பு - “இன்னுமா சாப்பிடற?”
சற்று உனது பாசக்கொடுமையை தளர்த்து
உன்னுடன் நள்ளிரவு தாண்டியும் பேசுவதற்காகவாவது
சற்று அதிகமாக சாப்பிட்டுக்கொள்கிறேன்


###


இந்த விளையாட்டு எனக்குப் பிடிக்கவேயில்லை செல்லம்
நமது ஒவ்வொரு சந்திப்பிற்கும் வீட்டில்
எனது மாமனார் மாமியாரிடம் நீ பொய் சொல்வதும்,
உனது மாமானார் மாமியாரிடம் நான் பொய் சொல்வதும்.
என்றுதான் முடிவுறும் இந்த பொய் விளையாட்டு?


###


உன்னிடம் பிடிக்காதது-
எவ்வளவு முத்தக் கோரிக்கைகள் கேட்டாலும் நிராகரிப்பது
உன்னிடம் பிடித்தது-
நீ மட்டும் கோரிக்கையோ அறிவிப்போயின்றி எனக்கு தருவது
அதென்ன வாங்குவதை விட தருவதில் உனக்கு அப்படியொரு இன்பம்?


###


நமது கடைசி சந்திப்பில்
புறப்படும்போது கேட்டாய், “உன்னை கிள்ளிக்கட்டுமா என்று?”
வேண்டாம் வலிக்கும், எனக்கல்ல உன் செல்லத்திற்கு என்றேன்
மிகவும் வற்புறுத்தினாய்
நானும் “சரி ஒரே முறை மட்டும்” என சம்மதித்தேன்
உதட்டால் உதடு கிள்ளுவாய் என அறியாமல்
என் அறிவை என்ன சொல்ல என் கள்ளி?