Wednesday, 29 August 2012

மணப் பாண்டம்…


சிறு துரும்பு, கல்,
கசடு நீங்க
உலர்ந்த மண்ணென சந்தித்தவ,
பதமாய் நீர் சேர்த்து
நம்மைப் பிசைந்து
களிமண்ணென சேர்ந்து கிடந்தவ,
சரியான பதம் பார்த்து
அள்ளியெடுத்து
மத்தியப் புள்ளியில் ஒன்றமர்ந்தவ,
இத்தருணம்
காதல் சக்கரம் சுழலத் துவங்குகிறது
மத்திய அழுத்தம் சீராக்கி
படர்ந்து பரவ
விளிம்பு நோக்கி உரு தரித்தவ,
பொறுமையையும் பொறுமை ஆட்கொள்ள
கவனமே கருத்தென உயரம் வளர்ந்தவ,
தேவை சேர, கழிசல் நீங்க
ஈரப்பதம் சீராக்கி
சுற்றத்தாருக்கும் உருவம் புலப்பட்டவ,
இன்னும்
காதல் சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது
கருத்தாய் முழு உருவம்
முடிக்கும் தருணம்
ம்ம் எனும் ஒற்றைச் சொல்
உலர்தலுக்காக காத்திருக்கிறோம்
இன்னமும் சக்கரம் சுழற்றிய படி

Monday, 30 July 2012

காதல் சடுகுடு…


காதல் வலியெடுத்து
உடம்பு முழுக்க நோகுதடி,
முத்த ஒத்தடம்
கொடுக்க வேணும்
சீக்கிரமா வாடி புள்ள
$
#*#*#
$
கிளையுதிர்த்த இலையொன்று
கிளையுடனான பற்றுதலை
அசைபோட்டபடி அசைந்து
வீழ்ந்து கொண்டிருக்கிறேன்
தரை தொடும் முன்
தாங்கிப் பிடிக்க வந்துவிடு
$
#*#*#
$
கடிகார மணற்துகளென
உன் நினைவுகள்
கரைந்து கொண்டிருக்கின்றன
சீக்கிரம் என்னைப்
புரட்டிப் போட்டு
நிரப்பிவிடு
$
#*#*#
$
உன் காதல் எனக்கு
கசக்கிறது
கலப்படமில்லா தூய
சாக்லெட் சுவையென
#
#*#*#
$
நித்தம் நித்தம்
வேணான்டி
ஒத்தை முத்தமொன்னு
போதுமிப்போ
பித்தாகிப் போன
இந்தப் பாதகனுக்கு

Tuesday, 7 December 2010

ராசாத்தி என் உசுரு என்னுதில்ல…

மழைக்கால காலை நேரப் பயணமாய்
                              உனைப் பின் தொடர்கிறேன் நான்
நமக்குள் எல்லாம் முடிந்து விட்டதாய் சாலையின்
                              சாக்கடையை வாரியிறைத்துப் போகிறாய் நீ
சாக்கடை படிந்த என்னை முழுவதுமாய்
                              நனைத்துப் போகிறது உன்னுடனான நினைவுகளின் பெருமழை!

#

இந்தப் பிறந்தநாளுக்கு பலமுறை வாழ்த்திய
                              உனதன்பினில் மனமகிழ்ந்திருந்தேன்
இனிவரும் எல்லாப் பிறந்த நாளுக்குமான
                              மொத்தமான வாழ்த்துக்களே அவை
என்றறிந்ததும் மன____________!
(வரிகளை முழுமைப் படுத்திடும் வலிமை இல்லை எனக்கு)

#

மதிப்பிடவியலா தங்கத் தருணங்கள்
                              உன் மீதான காதலில் என்றவனிடம்
வாழ்வின் கொடுங்குற்றக் கனங்கள்
                              என் மீதான காதல் என்கிறாய்
தன் விசும்பல் ஒலியினை மறைத்து அழுதிட
                              பேரிரைச்சலான இடங்களைத் தேடிப் போகிறது நம் காதல்!

#

மயானபூமியில் சதைப்பிண்டமாய் நானிருக்க
                              எல்லாம் முடிந்து விட்டதென எரியூட்டிப் போகிறாய் நீ
எரிந்து முடித்தபின் நெற்றிப்பொட்டு நாணயமாய்,
                              மிஞ்சிய எலும்புத்துண்டுகளாய் நம் நினைவுகள்…!!!

Wednesday, 27 October 2010

நீதான் என் தேசியகீதம்…

உனக்குள் என்னையும், எனக்குள் உன்னையும்
புதைத்துதான் நம் காதல் விதை வளர்கிறது என்கிறாய்…
அது நம்மால் மட்டுமின்றி நம் பெற்றோரால்
நீருற்றி வளர்த்திடப் படவேண்டுமென்கிறாய்…

உன்னை எனக்கும், என்னை உனக்கும் பிடித்துப் போனதைவிட
என்னை உன் வீட்டவர்க்கும், உன்னை என் வீட்டவர்க்கும்
பிடித்துப்போக வேண்டுமே என கவலை கொள்வாய்
பிறகு நீயே, ‘கண்டிப்பா பிடிக்கும்டா! எல்லார்க்கும்’
என நம்பிக்கையுடன் தோள் சாய்ந்து முகம் புதைப்பாய்…

ஒருவேளை நாம் நினைத்தபடி அவர்களுக்கு பிடிக்காது போயிடின்?
என சில நிமிடங்கள் கவலை கொள்வாய்- பின் நீயே,
‘ச்சே ச்சே. ஏண்டா இப்படி தப்பு தப்பாவே நினைக்கிறே?’ என
என்னைக் கடிந்துகொள்வாய்…

இருநாட்கள் உண்ணாவிரதம், அம்மாவிடம் புரியும்படி பேசி
சம்மதிக்கவைப்பது, அப்பாவையும் அம்மா மூலமாக கவிழ்ப்பது
என உனது வீட்டிற்கான உனது யோசனைகளையும் அவை நிச்சயம்
வெற்றி பெறும் எனும் உனது நம்பிக்கையையும் கூறிவிட்டு…

‘உங்க வீட்ல என்ன பிடிக்குமாடா?’ என குழந்தையாய்க் கேட்கிறாய்,
உன்னுடன் பழகிய நாட்களில், எனக்கு உற்ற துணையாய் நீ இருப்பாய்
என்பதை விட, என் பெற்றொருக்கு நல்லதோர் மருமகளாய் இருப்பாய்
என நம்பிக்கை கொண்டே நம் காதல் விதையை நான் விதைத்தேன்
என்பதை எப்படி உனக்கு உணர்த்துவேனடி???

காதலியில்லாக் காதல்…

உறங்கியதும் கனவுத்திரை விரிகிறது,
தோழர்கள், தோழிகள், உறவினர்கள் என
விளையாடிட வருபவர்களிடமெல்லாம்
‘அவள் வரும் நேரமிது. மன்னியுங்கள்’ எனக்
கூறி வழியனுப்பிவிடுகிறேன், என்றுமே வந்திடாத
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

வேகத்தடைப் பயணம், கூட்டமில்லா திரையரங்கம்
கிழக்குக் கடற்கரை சாலையில் குழம்பியகம்
மெல்லிய சாரலில் நெடுந்தூரப்பயணம் என
ஒவ்வொன்றும் உன் நினைவை தூண்டிடத் துடிக்கின்றன
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

இந்தப் பதிவில் உன் பெயரினை அறிவித்திட வேண்டும்
அடுத்த பதிவிலாவது நிச்சயம் அறிவித்தேயாக வேண்டுமென
எனக்குள் நானே நினைத்துக் கொண்டிருக்கிறேன்
உன் பெயர் கூட எனக்குத் தெரியாத
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

உனக்காக எழுதப்பட்ட குறுந்தகவல்கள்
காதலர் தினங்களில் வாங்கப்பட்ட பரிசுகள்
உன்னுடன் பகிர்வதற்கான சந்தோஷங்கள், துக்கங்கள்
என அனைத்துமே உனக்காக காத்திருக்கின்றன
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

இத்துனை நாளாய் கிறுக்கிய கிறுக்கல்கள் யாருக்கானவை
எனக் கேட்டிடும் நட்பு வட்டங்களிடம் கூறாவிடினும்
‘உனக்காகத்தான்’ என உன்னிடமாவது கூறிவிடத் துடிக்கிறேன்
நீ என்னும் உன்னை யாரென்று தெரியாமலே

குறுந்தகவல்கள்…

எடுக்க ஆளில்லாமல் கதறும்
                      அழைப்பு மணியோசை நான்
யாருமில்லா நேரம் மீண்டும் மீண்டும்
                           அழைத்திடும் அழைப்புகள் நீ
‘34 தவறிய அழைப்புகள்’ என
                          திரையில் காட்டிடும் தகவல் நம் காதல்
#
உறக்கம் வர அழுதிடும் குழந்தை நான்
தொட்டிலிட்டு எனைத் தாலாட்டும் அன்னை நீ
உறக்கத்தில் தேவதை கண்ட குழந்தையின்  புன்சிரிப்பு நம் காதல்
#
பறக்கத் துடிக்கும் இராக்கெட் பட்டாசு நான்
என் திரியினைக் கொளுத்திடும் மத்தாப்பு நீ
வெடித்துச் சிதறிடும் வாணவேடிக்கை நம் காதல்
#
இன்னிசைப் பாடல்களின் இசைத்தட்டு நான்
என்னுள் எழுதியதை படித்திடும் மிண்ணனு இயந்திரப் பெட்டி நீ
பொத்தானை அழுத்தியதும் கேட்டிடும் இன்னிசை நம் காதல்
#
சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சி நான்
எனைக் கவர்ந்திழுக்கும் அழகிய பூ நீ
என்னால் சுமக்கப்படும் மகரந்தம் நம் காதல்
#
அகல் விளக்கு நான்
என்னுள் ஊற்றிய நெய் நீ
நம்மால் ஒளியூட்டப்பட்ட சுடர் நம் காதல்
#
நட்டு வைத்த விதை நான்
என் மேல் ஊற்றிடும் நீர் நீ
நம்மால் வளர்ந்திடும் செடி நம் காதல்

Monday, 20 September 2010

பாஸ் என்கிற பாஸ்கரன்…

ஆர்யா - பாஸ்கரன்,                                           நயன்தாரா - சந்திரிகா
சந்தானம் - நல்லதம்பி,                                     பஞ்சு சுப்பு - சரவணன்
சித்ரா லக்ஷ்மணன் - சண்முக சுந்தரம்,   ராஜேந்திரன் - வேல்பாண்டி
இசை - யுவன்,                                                      இயக்கம் - M.ராஜேஷ்
வெளியீடு - ரெட் ஜெய்ண்ட் மூவீஸ்

படத்துக்கு டைட்டில் போடும் போதே 10.10னு மட்டுமே மணி காட்டுற கடிகாரத்துல நொடி முள் மட்டும் சுத்தி சுத்தி எழுத்துக்களை அழிக்கிற மாதிரி காமிச்சு டைரக்டர் ஏதோ சொல்ல வர்றாரு. அவரு என்ன சொல்ல வர்றார்னா?
ஒண்ணும் சொல்ல வரல. அந்த கடிகாரம் ரிப்பேராகிப் போய் ஓடாம நிக்குது. அவ்ளோதான்.

சந்தானம் ஹீரோவா நடிச்சிருக்கிற பாஸ் என்கிற பாஸ்கரன்ல, சாரி சாரி - ஆர்யா பாஸ்@பாஸ்கரனா நடிச்சிருக்கிற இந்த படத்துல சிவா மனசுல சக்தி எடுத்த அதே ஃபார்முலாவை யூஸ் பண்ணியிருக்காரு ராஜேஷ்.  கதைங்கிற வார்த்தைக்கு கூட ரெண்டு எழுத்து இருக்கு. ஆனா இந்த படத்துல???

ஜாலியா ஊர் சுத்திகிட்டு அரியர்ஸ பல வருஷமா க்ளியர் பண்ண டிரை பண்ற பாஸ்கரை - சந்திரிகா கரெக்ட் பண்ணனும்னு பாக்குறாங்க. ஆனா வேலையில்லாதவருக்கு அப்பா பொண்ணு கொடுக்க மாட்டாரேனு அவர மொதல்ல லைஃப்ல செட்டில் பண்ணிட்டு அப்புறமா கரெக்ட் பண்றாங்க. பாஸ் கூட அவரோட ஃப்ரெண்ட் நல்லதம்பி. ‘நண்பேன்டா’ங்கிற ஒரு வார்த்தைக்காக அவரு படுற இம்சை இருக்கே. அய்யோய்யோய்யோ! இதுதான் பாஸ் என்கிற பாஸ்கரன்.

சந்தானத்தை மட்டுமே நம்பி எவ்ளோ நாளைக்கு காலம் தள்ளுவீங்கன்னு தெரியல. படம் முழுக்க சந்தானம் சந்தானம் சந்தானம்தான். சொல்லப்போனா ஹீரோ இன்ட்ரொடக்சனுக்கு முன்னாடியே சந்தானம் இன்ட்ரோ. அதுவும் அந்த வழக்கமான அசட்டுச் சிரிப்போட. எவனோ ஓட்டின செகண்ட் ஹேண்ட் வண்டிக்கு அவரை வெச்சு புதுசா ரெஜிஸ்டர் பண்ற காமெடி, இன்னொரு ‘கிரி’ அக்கா ரகசியம்.

படத்தோட பெயரே ஆர்யாவோட கதாபாத்திர பெயர்தான்கிறதால அவரும் காமெடி செஞ்சே ஆக வேண்டிய கட்டாயம். அவரும் அவரால முடிஞ்சதை டிரை பண்ணியிருக்காரு. சந்தானமே முழுசா டாமினேட் பண்ணிடறதால ஆர்யாவுக்கு கெத்து கொஞ்சம் கம்மியா இருக்கு. சி.ம.ச ல ஜீவாவுக்கு இருந்த அளவுக்கு அழுத்தமில்ல. படமும் அதே மாதிரிதான். சி.ம.ச -க்கு 6 மார்க் போடலாம்னா இதுக்கு 4 மார்க்.

நயன்தாரா - கேக்கவே வேணாம். அம்மணிக்கு வயசாயிடுச்சுன்னு எல்லாரும் இந்த படத்தை பார்த்து கன்ஃபார்ம் பண்ணிடறாங்க. எப்பவும் போல ஹீரோயினுக்கு இந்த படத்துலயும் கேரக்டர் இல்லைங்கிறது கூட எனக்கு கோபம் இல்ல, ஹீரோவுக்கு வேலையே இல்லைனாலும் அவரை மாய்ஞ்சு மாய்ஞ்சு லவ் பண்றதுகூட எனக்கு கோபமில்லை, ஆனா அந்த லிப்-டு-லிப் சீன் வரும்போது கரெக்டா டைமிங் பார்த்து “அய்யய்யோ பிரபுதேவா பாவம்”னு எதுக்குய்யா தியேட்டர்ல ரன்னிங் கமெண்ட் கொடுக்குறீங்க? நாஞ்சென்ஸ். :evil:

சந்தானம் பத்தி இங்க சொல்லணும்னா படத்துல அவரு வர்ற ஒவ்வொரு சீனையும் சொல்லியே ஆகணும். அதனால படம் பார்த்து தெரிஞ்சுக்கோங்க. மங்கூஸ் மண்டை மாமா சித்ரா லக்ஷ்மண், அண்ணன் சரவணனா சுப்பு, அரியர்ஸ் சுவாமிநாதன்னு எல்லாருமே ஒரு சில காட்சிகள்ல வந்தாலும் சிரிக்க வெச்சிருக்காங்க. நான் கடவுள்ல அப்படி கொடூரனா நடிச்ச ராஜேந்திரன்?!?!? உங்கள மாதிரி ஆளுங்களை பாலா மட்டும்தான் பயன்படுத்திக்குவாரு. ஆர்யாவோட சிபாரிசுல இங்க சேர்ந்தீங்களா? :roll:

 ஷகீலா - ராஜேஷ் சார் எனக்கோரு உண்மை தெரிஞ்சாகணும். சி.ம.ச-லயும் இவங்க வந்தாங்க. இந்த படத்துலயும் வந்திருக்காங்க. இதுல ஏதாவது உள்குத்து இருக்கா ராஜேஷ் சார்? அதுலயும் அவங்க அந்த டுட்டோரியல்ல அந்த ஃபார்முலாவைதான் நடத்தணும்னு எதுக்கு செலக்ட் பண்ணினீங்க?

இசை - யுவனின் வழக்கமான சரக்குல கிக் கொஞ்சம் கம்மியா இருக்கு. யார் இந்த பெண்தான் நல்லா இருக்கு. பாஸூ பாஸூ பாஸு, தத்தி தாவும் - ஓ.கே. அய்லே அய்லேவும், மாமா மாமா பொண்ண குடு-வும் படத்துக்கு தேவையே இல்ல. எரிச்சலூட்டுது ரெண்டும்.

சி.ம.ச-ல பல்பு வாங்குற மாப்பிள்ளையா அடுத்த படமான இந்த ஹீரோ ஆர்யா வந்த மாதிரி, இதுல பல்பு வாங்க அடுத்த படத்தோட ஹீரோ உதயநிதி வருவாருன்னு எதிர் பார்த்தேன். ஆனா ஜீவாவே ‘சிவா’வா வந்து கடனை தீர்த்துட்டாரு.

படத்துல நோட் பண்ண வேண்டிய ஒரு பொன்மொழி “பொண்ணுங்களை பொறுத்த வரைக்கும் பசங்க பல வகை. அதிகமா பேசினா போர் பார்ட்டி, பேசவேயில்லனா சாம்பார், சிரிச்சு சிரிச்சு பேசினா ஜொள்ளு, சிரிக்கலைனா பிதாமகன், இங்லீஷ்ல பேசினா பீட்டரு, தமிழ்ல பேசினா லோக்கலு. ஆனா பசங்களுக்கு - பொண்ணுங்க ரெண்டே வகை. ஒண்ணு சூப்பர் ஃபிகரு, இன்னொன்னு சப்ப ஃபிகரு” - நோட் பண்ணிகிட்டீங்களா?


பாஸ் என்கிற பாஸ்கரன் - நல்லதம்பி என்கிற சந்தானம்…