Tuesday, 7 December 2010

ராசாத்தி என் உசுரு என்னுதில்ல…

மழைக்கால காலை நேரப் பயணமாய்
                              உனைப் பின் தொடர்கிறேன் நான்
நமக்குள் எல்லாம் முடிந்து விட்டதாய் சாலையின்
                              சாக்கடையை வாரியிறைத்துப் போகிறாய் நீ
சாக்கடை படிந்த என்னை முழுவதுமாய்
                              நனைத்துப் போகிறது உன்னுடனான நினைவுகளின் பெருமழை!

#

இந்தப் பிறந்தநாளுக்கு பலமுறை வாழ்த்திய
                              உனதன்பினில் மனமகிழ்ந்திருந்தேன்
இனிவரும் எல்லாப் பிறந்த நாளுக்குமான
                              மொத்தமான வாழ்த்துக்களே அவை
என்றறிந்ததும் மன____________!
(வரிகளை முழுமைப் படுத்திடும் வலிமை இல்லை எனக்கு)

#

மதிப்பிடவியலா தங்கத் தருணங்கள்
                              உன் மீதான காதலில் என்றவனிடம்
வாழ்வின் கொடுங்குற்றக் கனங்கள்
                              என் மீதான காதல் என்கிறாய்
தன் விசும்பல் ஒலியினை மறைத்து அழுதிட
                              பேரிரைச்சலான இடங்களைத் தேடிப் போகிறது நம் காதல்!

#

மயானபூமியில் சதைப்பிண்டமாய் நானிருக்க
                              எல்லாம் முடிந்து விட்டதென எரியூட்டிப் போகிறாய் நீ
எரிந்து முடித்தபின் நெற்றிப்பொட்டு நாணயமாய்,
                              மிஞ்சிய எலும்புத்துண்டுகளாய் நம் நினைவுகள்…!!!